காவிய காதல் கவிதைகளில் மரித்து போக,
கலியுக காதல் அன்றாட காட்சிகளில் சாட்சியாக,

இமைத்துடிப்பின் பிரிவில் உயிர் கனப்பதுமில்லை...
கைத்தொலைபேசி இரவில் தலையணைக்கடியில்
பகலில் குழியலறையில் மணிக்கணக்கில்
அவனது பெயர் தோழியின் பெயரானது..
சிரித்து கொள்வோம் சில சமயம்...
அடித்து கொள்வோம் பல சமயம்...
கை கோர்த்து சாலைகள் அளந்தோம்...
அன்றில் பறவையில் இரண்டானோம்...
இடையில் ஏதோ ஞானம் தோன்ற,
இது நம் பாதை இல்லை என்று
அவசரமாய் முடிவெடுத்தோம்...
மனமொன்றி
காதல் கதிரை மீண்டும்
கரும் இருட்டுக்குள் கட்டி கொண்டு
நட்பு பனிசால்வை போர்த்தி
கை குலுக்கி கொண்டோம்...
இருதிசை பறவைகள் என பறை சாற்றினோம்...
தண்டவாளம் எனவும் சொல்லி கொண்டோம்...
சமாந்தர கோடுகளில் எம் பயணம்..
இதுவரை எல்லாம் இயல்பாக இருக்க
நாட்கள் நகர்ந்தது...
தனிமை கனத்தது...
இலைகள் உதிரும் சாலையில்
சிரித்து பேசிய நீ இல்லை...
நான் விழி கனத்த தருணங்களில்
இதழ் மலர வைத்த நீ இல்லை...
பேருந்து பயணங்களில் தோள் சாய்த்து
கொள்ள நீ இல்லை...
சதா செல்ல சண்டை போட்டு
ஊடல் கொள்ள நீ இல்லை...
யாதுமாகி நின்ற நீ யாரோவாகினாய்..
ஏதுவாக இருந்த நான் ஏழையானேன்...
பிரிந்த பின் காதல் கொண்டேன்..
முற்று புள்ளியின் சில புள்ளிகள்
நான் வைத்து கொண்டேன்..
நீ முற்று புள்ளிக்கு பின் அடுத்த
காதல் கவியையே எழுதிக்கொண்டாய்.
உன் தாளில் எழுத்து பிழையாய் நான்...
என் தாளில் கவி வரியாய் நீ...