18 December 2009

யாரோ??


இலக்கணத்துக்கும் இலக்கியத்துக்கும்
இடையில் சிக்கி கொண்ட எழுத்து பிழை
ஆகாயத்துக்கும் அலைகடலுக்கும்
இடையில் சிக்கி கொண்ட தொடுவானம்
மலை முகட்டுக்கும் மழை முகிலுக்கும்
இடையில் சிக்கி கொண்ட காட்டு தாவரம்
சாளர சுவரில் அமர்ந்து கொண்டு
இப்படியெல்லாம் என்னை எண்ணிக் கொள்வேன்
தன்னிரக்கம் தலை விரித்தாடும் பொழுதுகளில்.

ஆழ்ந்த உறக்கங்களில் கனவுகள் இல்லை
பூக்கள் செறிந்த சாலையில் வண்ணத்து பூச்சிகள் இல்லை
ஆல மர நிழலில் விழுதுகள் இல்லை
நதியில் மிதக்கும் படகுகளில் துடுப்புகள் இல்லை
இவையெல்லாம் ஏன் இல்லை என எண்ண தோன்றவும் இல்லை

காதல் காமம் கண்ணீர் கனவு
எல்லாம் கடந்த மோனமாகி
எங்கேயோ தொலைந்த என்னை மட்டும்
இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன்
சூரிய கதிரில் அலைகடலில்
வயல் வெளியில் மலைத் தொடரில்
ஆழ்ந்த நிசப்தத்தில்…
ஆனால்
தெளிவிழந்த தேடல்கள் கொணர்ந்த
அசாத்தியமான தனிமையையும்
ஆரவாரிக்கும் அடி மனதையும் அடக்க
அதிகாலை பனித்துளி
தொட முடியாத வானவில்
தொலைதூர நட்சத்திரம்
ஒற்றையாகவே உலாவரும் வெண்ணிலா
புது மழை சொரியும் வானம்
மழலை மொழிகள்
அந்தி செவ்வானம்
இத்தனைக்கும் தோழியாக என்னை
அறி முகப்படுத்தி கொள்கிறேன்
தற்காலிகமாக
தோல்வியை ஒப்பு கொள்ள முடியாததால்..

2 comments:

  1. ”அதிகாலை பனித்துளி
    தொட முடியாத வானவில்
    தொலைதூர நட்சத்திரம்
    ஒற்றையாகவே உலாவரும் வெண்ணிலா
    புது மழை சொரியும் வானம்
    மழலை மொழிகள்
    அந்தி செவ்வானம்”
    ஆம். நாம் இப்படித்தான்.. இந்த வேக உலகத்தில் அந்நியமாகி, நீங்கள் கூறியது போல தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்,

    ReplyDelete
  2. இலக்கணத்துக்கும் இலக்கியத்துக்கும்
    இடையில் சிக்கி கொண்ட எழுத்து பிழை
    ஆகாயத்துக்கும் அலைகடலுக்கும்
    இடையில் சிக்கி கொண்ட தொடுவானம்
    மலை முகட்டுக்கும் மழை முகிலுக்கும்
    இடையில் சிக்கி கொண்ட காட்டு தாவரம்
    சாளர சுவரில் அமர்ந்து கொண்டு
    இப்படியெல்லாம் என்னை எண்ணிக் கொள்வேன்
    தன்னிரக்கம் தலை விரித்தாடும் பொழுதுகளில்.


    மிக அழகான சொல்லாடல்...
    மிக அழகான வரிகள்...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete