08 December 2009

முதிர் கன்னி






















இன்று அந்தியில் சாயும் கதிரவனுடன்
என் முப்பதாவது வயதும் சாய்ந்துவிடும்
முப்பத்தியொன்றை தொடும் நான்
ஒரு முதிர்கன்னி
கல்யாண சந்தையில் மட்டும் விலை
போகாத சித்திரம்
பொன்னோடும் பொருளோடும்
பிறந்திருந்தால் ஒருவேளை….
காதல் கொண்டு தங்கையை போல
ஓடிப்போயிருந்தால் ஒருவேளை...
வெளி நாட்டில் மாமாவும் சித்தப்பாவும்
இருந்திருந்தால் ஒருவேளை….
இந்த எல்லா இருந்திருந்தால்களும்
இல்லாதிருந்ததாலும்…
எல்லாம் தாண்டி ஏழரையில் தூங்கிய
செவ்வாய் மட்டும் இருந்ததாலும்
தந்தையின் நரை தாண்டிய தள்ளாமை கூட
காலாவதியாகிய கடைப்பொருளை
பார்க்கும் கடைக்காரனை போல்
சலிப்பாக பார்க்கிறது….
”உன்னுடன் படித்த மாலதிக்கு
இரண்டாவதும் பெடியனாம்..”
சலித்து கொண்டாள் அம்மா
இரவல் கனவில் மாலதி சிரித்தாள்
தாய்மை பூரிப்புடன்
ஏக்கங்கள் கடலலை போல் ஆரவாரிக்க
விழித்த நான் இரவின் முடிவு வரை
ஒற்றை தலையணையில் முகம் புதைத்து கொண்டேன்..
பள்ளி முடிகையில் சைக்கிள் பாஸ்கற்றில்
கடிதம் போட்ட சைக்கிள் கடைக்காரன் கூட
அநியாயத்துக்கு நினைவு வந்தான்
ஒருவேளை அவனை மறுத்தது கூட தவறோ
என்று எனக்குள் மரித்து போனதாய் எண்ணியிருந்த
மக்கு மனம் வினா தொடுத்தது….
அவனுக்கு இப்ப ரவுணுக்குள்
சொந்தமா கடையும் ஒரு பிள்ளையுமாம்
கரியும் கட்டயுமாய் நின்றவன்
விழிகள் திறந்திருந்த இருட்டுக்குள் சிரித்தான்.
தந்தையின் பெல்ற்றுக்கு பயந்து ஒளிந்த கனவுகள்
தங்கைக்கு பின்னாவது தோன்றியிருக்கலாம்
ஓடிப்போனாள் என்று குதித்த அப்பா கூட
இப்ப பேரனை கண்டதும் அடங்கி விட்டார் தாத்தாவாக…
இலக்கற்று நான் மட்டும்
நாளைய மூன்றாம் வகுப்பு பரீட்சை வினாத்தாள்
திருத்த வேண்டும் என்று இறுதியில் எண்ணிக் கொண்டேன்
நானும் ஒரு பட்டதாரி ஆசிரியை அல்லவா???
அதிகாலையின் முப்பத்தியோராவது வயதில்
கேட்டுக்கொண்டேன் ஏன் எனக்கென்று ஒரு குடிகாரனை
கூட படைக்காமல் விட்டாய் என்று….

4 comments:

  1. ரொம்ப அழகாக இருக்கிறது வலியோடு...

    ReplyDelete
  2. படிச்சதில் பிடிச்சது! நல்லாயிருக்கு... வலியாவும் இருக்கு!!

    ReplyDelete
  3. settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

    ReplyDelete