29 December 2009

சாசுவதம்


வானம் துறந்து கடல் கலந்து
உப்பாக உடல் கொண்ட மழைதுளி,
பாறையின் உரு பிளந்து
உயிர் கொண்ட சிறு வேர்,
காமத்துக்கு மெருகூட்டிய கந்தர்வம்.
நீர் விழுந்தும் உடல் நனையாத நிழல்,
நீலம் இழந்தால் மட்டும் தொலைந்து போகும்
தெரு பிச்சைகாரனின் வான் கூரை,
வெறுப்புக்கும் விருப்புக்கும் இடையில்
விலங்கிழந்த சாணக்கிய இடைவெளி,
காதலி மார்பு சாய்ந்து சிந்திய
ஒரு துளி கண்ணீர் சொன்ன காதல்,
அழகான சாசுவதங்கள்……….
ஏதோ ஒரு இனம் தெரியாத ஆண்டின்
பனியிருட்டில் மரித்து போன மானுடம்…
தம் முகம் பார்த்து சிரித்து கொள்ளும்
சுய நல கண்ணாடிகள்…
புன்னகை கதவுகளின் இடுக்குகளில்
ஒளிந்திருக்கும் பொய்கள்…
இலவச இணைப்பாக இழந்த பகுத்தறிவு
மரணப்படுக்கைகளிலும் வார்த்தை
கொள்ளாத வாய்மைகள்…
பட்டணங்கள் மெல்லாமல் விழுங்கிய
பசுமைகள்…
மேலிசை நாகரிகத்தில் நசுங்கிக் கொண்டிருக்கும்
மோகன மெல்லிசை…
கடவுள் மட்டும் மறந்த பூவுலகம்…
இன்று இணைந்து கொண்டன
சாசுவதத்தில் சாசுவதமாக…

15 comments:

 1. கடவுள் மட்டுமல்ல மனிதமும் கூட..!

  ReplyDelete
 2. //வெறுப்புக்கும் விருப்புக்கும் இடையில்
  விலங்கிழந்த சாணக்கிய இடைவெளி,
  காதலி மார்பு சாய்ந்து சிந்திய
  ஒரு துளி கண்ணீர் சொன்ன காதல்,
  அழகான சாசுவதங்கள்//

  ஒவ்வொரு வரிகளும் அருமை.
  வாழ்த்துகள்

  ReplyDelete
 3. பிழந்து
  ithu sariyaa?

  ReplyDelete
 4. கந்தர்வம் க்கும்
  காந்தர்வத்துக்கும் ஏதும் வித்தியாசம் உண்டா?
  உண்மயாவே தெரியலைங்க
  விளக்க முடியுமா?

  ReplyDelete
 5. நானே நிறைய சந்திப்பிழையோடு எழுதுபவன்

  ReplyDelete
 6. பிழந்து என்பது தவறு, அங்கு பிளந்து என்று அமைந்திருக்க வேண்டும்..காந்தர்வம் என்பது களவு ஒரு விவாக முறை. களவியலுக்கு கந்தர்வம் என்றும் வழங்கப்படுவதாக எப்போதோ படித்த ஞாபகம்..:)

  ReplyDelete
 7. இலக்கியப்பிழை விடுத்து எழுத்துப்பிழை காணலில் அழகொன்றுமில்லை அன்பரே, பிழை தவிர்த்து பொருள் நுகர்தலே இலக்கிய நுகர்வோனுக்கழகு! வாழ்க தாயே உன் பணி!

  ReplyDelete
 8. தேஜோ said...
  இலக்கியப்பிழை விடுத்து எழுத்துப்பிழை காணலில் அழகொன்றுமில்லை அன்பரே, பிழை தவிர்த்து பொருள் நுகர்தலே இலக்கிய நுகர்வோனுக்கழகு! வாழ்க தாயே உன் பணி


  """"சாப்பிடும் போது இடைபடும் ஒற்றைமணல் தரும்
  கோபம் அளவில்லாதது . அனுபவித்ததுண்டா?
  எனக்கொன்றும் அவரின் தவறை சுட்டிக்காட்டி என்னை முன்னிறுத்திக்கொள்ள வேண்டிய
  அவசியம் இல்லை நண்பரே .
  நீங்களும் சுட்டிக்காட்ட மாட்டீர் . நான் சொன்னாலும் தவறு !!
  அப்போ யார்தானைய்யா சொல்வது ??/
  தவறை தவறென்று சொல்வது தவறோ அப்படியாயின் தவறுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும் நண்பர்களே """"""

  ReplyDelete
 9. குழந்தைமையில் செய்யும் தவறுகளை நானும் ரசிப்பவான்தான்
  எப்போதும் குழந்தையாகவே இருக்கமுடியாது நண்பரே . வளர்ச்சி ??? உங்கள் விருப்பம் ................

  ReplyDelete
 10. உணவின் பெருஞ்சுவையில் திளைத்திருக்கும் எனக்கு, மண் செய்யும் வில்லங்கம் தெரிவதில்லைப்போலும்....தங்கள் கருத்தில் குறைகண்டு குற்றப்படுத்துவது நோக்கல்ல நண்பரே, ஏற்பட்ட பிழை எழுத்துக்கூட்டத்தெரியாது விட்ட பிழைபோலும் தெரியவில்லை, இலத்திரனியற்படுத்தும்போது வந்த பிழை போலும் தோற்றிற்று. அதை ஒரு பொருட்டாக எடுப்பானேன் என்பதே நான் கூறவந்தது. தங்களை அது சுட்டிருந்தால் மன்னிக்கவும்.

  ReplyDelete
 11. நீர் சொல்ல முயன்ற விடயம் எனக்கு முன்பே புரிந்து விட்டது நண்பரே .
  வருத்தமில்லை. விமர்சனங்கள்( உங்கள் வாதப்படி குறை கூறுதல் ) எழுத்தை, எழுதுபவரை
  செம்மை படுத்தும் . படுத்தவேண்டும் என்பதே ஏன் ஆவல் . நன்றி தங்கள் புரிந்துணர்வுக்கு .

  ReplyDelete
 12. அடடா கவிதை சும்மா கலக்கு கலக்குன்னு கலக்குது....உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. நன்றி, உங்களுக்கும் உரித்தாகட்டும்...:)

  ReplyDelete
 14. உங்கள் கவிதைகளில் நனைந்து அடிமையாகிப்போனேனம்மா.!
  கவியிடுக்கில் மரபுகளும் இலக்கணமும் கவிபோல் குதித்துவிளையாடியிருக்கிறது. பாராட்டுக்கள்.

  ReplyDelete