10 July 2010

மௌனமான கவிதை


இதய கிடங்கில்
எங்கோ ஒரு மூலையில்
என்றோ புதைந்து போன அவள்
முகம்
தூசு படிந்த சித்திரத்தை
துடைக்கையில் தெரிவது போல்
என் எதிரில்….
ஆழ்ந்த கண்களிற்குள் தேடல்…
அதே அவள் தான்…

சிந்தனையின் எல்லை வரை சென்றும்
அவள் அறியாள் தாய் மடி…
”உறவுகள்”
அகராதியில் கண்டு அவள் அறிந்த
ஒரு வார்த்தை…
நட்சத்திரங்கள் இழந்த வெற்று வானில்
ஒற்றை நிலா போல
அழகான ஆனால் வலி மிகுந்த உவமை அவள்…
வானோடு வாழ்ந்து
தடுக்கி தரையில் விழுந்த தேவதை அவள்…
அனாதை…

போராட்டக்களங்கள் வீரர்களுக்கு
போராட்டம் மட்டுமே களங்கள் அவள் போன்றோருக்கு…
வீரன் தோற்றாலும் போராட்டங்கள் பேசப்படும்
அவள் தோற்றால் பேசவோ யாரும் இல்லை..
பேசப்படவோ எதுவும் இல்லை….
ஆனாலும் அவள் போராட்டம் நான் அறிவேன்
ஒரு ஊமை தோழியாய்..

ஊமை இரவுகளிலிருந்து
ஏக்கங்களை மீட்டெடுத்தாள்…
அர்த்தங்களுக்கு வாழ்வெழுதாமல்
வாழ்வுக்கு அர்த்தமெழுதினாள்..
தோல்விகளை தூர நிற்கும் வெற்றி என்றாள்…
வெற்றிகளை தோல்வி தோற்கடித்த மாயை என்றாள்..
அவளிடம் மண் நோக்கும் நாண பொய்கள் இல்லை…
பெண் என்ற பேதமை தழைகள் இல்லை…
அவள் ஊரறிய சாதித்தது எதுவும் இல்லை…
ஆனால் இருபதாவது வயதில்
இரு ஏழு வயது சிறுமிகளின் அன்னை…
தனித்து இயங்கும் சூரியன் அவள்…

கடல் கொந்தளித்தாலே
கவிதை கிறுக்கும் என்
ஒரே மௌனக்கவிதை அவள்…