
தட்சிணை கொண்டு சொந்தம் தேடும் பேடிகளே!!!
காலம் தந்த வார்த்தை மடைகள் திறந்து
உமக்கொரு மடல்..
விதிகள் வரைமுறைகள் புரியாத சுழலில் நான்
காரணம் நீவிர்
கரை சேர்க்கும் முயற்சியில் தோற்ற தந்தை
மூன்றாவது மாரடைப்புடன் முக்தி கொண்டார்…
கடைசிவரை தான் சேமித்த பச்சை தாள்களை
பேடிகள் உமக்கு விட்டு விட்டு…
வெயிலில் கூட தொடராதடா உன் நிழல் உன் பின்
அத்தனை சுயமிழந்த சதிரடா நீ…
கண்ணாடியில் தெரியும் விம்பம் உனதல்லடா
ஒரு ஆண்மையில்லா அகதியினது…
உன் கண்ணில் ஒளியாகி
உன் கருத்தில் வார்த்தையாகி
உன் கனவில் நினைவாகி
உடன் வரும் பெண்மையின் மென்மையை விட
பெரும் வரம் ஏதடா உலகில்???
ஏன் உன் பேராண்மை கவசத்தை துறந்து
பிச்சைகாரனாகிறாய்????
விற்க பொருளிழந்த வாணிகனா நீ
உன்னையே விற்கிறாய்???
சந்தை மாடு அல்ல நீ விலை போக…
ஆடவன் நீயெனில் ஆண்மை பூண்..
உன்னவள் உனதாக நீ உடைமை கொள்..
பெரும் பணம் கொண்டவள் வாங்கிய நீயும்
தந்தை பிச்சைகாரனாகி ஏழைமகள் வாங்கிய நீயும்
அவள் உண்மை காதல் மட்டும் காண மாட்டீர் கடைசி வரை..
மின்சாரம் பாயும் மெல்லிய பூவடா பெண்கள்
அவள் கனவுக்கும் நினைவுக்கும் இடையில்
கசங்காமல் காதல் செய்..
பூமி கூட தேவலோகம் ஆகும் உனக்கு மட்டும்..
நினைவு கொள்…
நிமிர்ந்து நில்..