22 January 2010

வார்த்தையிழந்து.....



காரை காடுகளே
நாரை கூட்டங்களே
சேதி கேளீரோ!!!!
அத்தை மகனில் ஆசை வைத்தேனே
அச்சச்சோ
வெக்கத்தில் கத்திரி மேட்டு
செம்மண்ணா சிவந்தேனே….
சேலையில் சில்லறை முடிப்பாய்
மனசில ஒளிச்சு வச்ச அதை அத்தானுக்கு.
சொல்ல கருத்த குயிலுக்கு
நெல்லு தூவி காத்திருந்தேனே…
கொண்டை சேவலின் கூவலில்
அதை சொல்ல கூதலில் விழித்தேனே..
சேராத சேதி வயல் கிணறு பாசியா படிய கண்டு
கருக்கலில் நான் வச்ச கருவாட்டு குழம்பு கொண்டு
உச்சி வெயிலில் வயல் காட்டு வரம்பளந்தேனே…
பட்டாம் பூச்சி பிடிச்சு தந்தவன் காணாது
படபடக்கும் நெஞ்சு தொலைந்த கதையை
கண் பார்த்து சொல்ல விளைகையில்
மண்ணில பதிஞ்ச கண்கள் மரத்து போயினவே
அத்தனை புலன்களையும் சேர்த்து கொண்டு..
வயல் காடு முதல் வண்டி மாடு வரை
அறிந்த காதல்
வார்த்தையிழந்த காற்றாகி கலந்தனவே…
வளவி கொண்ட கை கோர்க்க
வாராயோ நீயாகவே...