30 December 2009

வருவாயா??


ஏதோ ஒரு சாலையிலோ
எங்கோ ஒரு சோலையிலோ
அலைகரையிலோ
பனி இருட்டிலோ
பள்ளியுடையிலோ
பேருந்து பயணத்திலோ
மின்னல் மழை நாளிலோ
கடை தெருவிலோ
சந்தித்தும் சிந்திக்காத
சந்திக்காமலே தொலைந்த
பார்த்தும் பாராத
பார்வை சிறைக்குள் சிக்காத
யாரோ ஒரு நானும் யாரோ ஒரு நீயும்
ஏதோ ஒரு நாளில் நாமாவோம்..
ஆனால் யார் நீ???
கைகோர்த்து உடன் வருவாயா?
கடல் வானம் வானவில் புல்வெளி அத்தனையும்
தோள் சாய்ந்து ரசிக்க வருவாயா?
நீள் வானம் பார்த்து,
மெல்லிசை செவி கொள்ள வருவாயா?
என் தனிமை கூட்டுக்குள் கனவாக வருவாயா?
நிலா இழந்த வானில் நிற்காத மழை துளியில்
துள்ளி நான் நனைய துணை வருவாயா?
கடிகார வீட்டுக்குள் காதல் மையத்தில்
விரல் சேர்ந்து வினாடி நேரம் கூட
பிரியாத சிறை செய்ய வருவாயா?
நீ நான் என்ற பேதத்துக்குள்
செல்ல விவாதங்கள் சலிக்காமல் நான் கொள்ள
ஊடலாகி ஒரு முத்தம் சுமந்து வருவாயா?
எது வரை என்றறியாத ஆயுளின்
எல்லை வரை என் இதயமும்
உன் இதயமும் இணைந்து துடிக்க
ஒரு விஞ்ஞான மாற்றம் செய்ய வருவாயா?
நேசத்துக்குள் கவிதை நான் சொல்ல
கேசம் நீவி ஒரு கவிதையாக
காதல் செய்ய வருவாயா?
சிட்டு குருவிகளின் சிறகுகளில்
என் நெஞ்சம் வானம் அளக்க
வண்ணச்சிறகுகளாக வருவாயா?
வெண்ணிலவில் கங்குலில்
பாதையில் பயணங்களில்
ஆதிகளில் அந்தங்களில்
தேவைகளில் ஆசைகளில்
என் அத்தனை நொடியிலும்
பங்கு கொள்ள
உன் அத்தனை நொடியிலும் பங்கெடுக்க
காத்திருக்கிறேன்…வருவாயா?
என் விழி நீரில் ஒரு முத்துக்கு சொந்தமாக
என் புன்னகையில் ஒரு அங்கமாக
பூத்திருக்க வருவாயா?
விடை தெரியாத வினாவாக நீ
விடை தேடும் வினாவாக நான்
மொட்டவிழ்ந்த வினாக்களோடு
தனித்திருக்கிறேன்…
வருவாயா??

29 December 2009

சாசுவதம்


வானம் துறந்து கடல் கலந்து
உப்பாக உடல் கொண்ட மழைதுளி,
பாறையின் உரு பிளந்து
உயிர் கொண்ட சிறு வேர்,
காமத்துக்கு மெருகூட்டிய கந்தர்வம்.
நீர் விழுந்தும் உடல் நனையாத நிழல்,
நீலம் இழந்தால் மட்டும் தொலைந்து போகும்
தெரு பிச்சைகாரனின் வான் கூரை,
வெறுப்புக்கும் விருப்புக்கும் இடையில்
விலங்கிழந்த சாணக்கிய இடைவெளி,
காதலி மார்பு சாய்ந்து சிந்திய
ஒரு துளி கண்ணீர் சொன்ன காதல்,
அழகான சாசுவதங்கள்……….
ஏதோ ஒரு இனம் தெரியாத ஆண்டின்
பனியிருட்டில் மரித்து போன மானுடம்…
தம் முகம் பார்த்து சிரித்து கொள்ளும்
சுய நல கண்ணாடிகள்…
புன்னகை கதவுகளின் இடுக்குகளில்
ஒளிந்திருக்கும் பொய்கள்…
இலவச இணைப்பாக இழந்த பகுத்தறிவு
மரணப்படுக்கைகளிலும் வார்த்தை
கொள்ளாத வாய்மைகள்…
பட்டணங்கள் மெல்லாமல் விழுங்கிய
பசுமைகள்…
மேலிசை நாகரிகத்தில் நசுங்கிக் கொண்டிருக்கும்
மோகன மெல்லிசை…
கடவுள் மட்டும் மறந்த பூவுலகம்…
இன்று இணைந்து கொண்டன
சாசுவதத்தில் சாசுவதமாக…

24 December 2009

மழை


பொன் மஞ்சள் வானம்
பூமிக்கு தன் காதல் சொல்ல
காலம் கனிய கண்டு
கருவண்ணம் பூசிக் கொள்ள
வெண் மேக குவியல் எல்லாம்
சிறகடித்து உடலொழித்து கொண்டன
வெட்கத்தில்
கதிரவனும் கதவடைத்து கொள்ள
சிந்திய கதிர்களில் ஒன்றிரண்டு
வானவில் கோலமிட்டு
காதலின் வருகையை தந்தியடித்ததோ
ஐநிலத்துக்கும்
சினத்தில் விழிதுடித்து மின்னல் கீற்றொன்று
துள்ளி மறைந்தது
கங்கண பேரொலி வான் திறந்தது
நானே சொல்லி கொள்வேன்
என் காதலை என்று தானோ…
கடலவன் பொங்கி சிரித்தான்
இந்த காதல் விளையாட்டு கண்டு
நாணல்கள் முகம் மலர்த்தின
ஆவலை அடக்க முடியாமல்
புள்ளினங்கள் கதவடைத்து
ஒளிந்திருந்து உளவறிந்தன
தோகை விரித்த நீல மயில்
சேதி சொல்ல நடமாடியது
விவசாயி விழி நீர் துடைத்தான்
தன் சின்ன மகள் மனம் மகிழ்வாள் என்று

உச்சி வானம் தொட்ட சின்ன துளி நீர்
தன் முதல் முத்தம் சுமந்து
நிலம் நாடி வர
குறும்பு மிக்க தென்றல் வீசி
அந்த முதல் முத்தத்தை
பூவிதழுக்கு பரிசளித்து சிரித்தது
தென்றலின் வம்பினால் கொதித்து
பல்லாயிரம் முத்தங்களை
அள்ளி தெளித்து தன் வீரம் காட்ட
அசட்டு தனமாக இடித்து உலகெழுப்பி கொண்டான்
விண்ணவன்.
பூமகள் புன்னகைத்து கொண்டு
தன்னை நாடி சிந்திய முத்தங்களையெல்லாம்
அள்ளி கொண்டு
தென்றலுக்கு தன் வெற்றி சொன்னாள்
தலை குனிந்து சுமந்து சென்றது தென்றல்
பூமகள் வெற்றியை மண்வாசனையாய்..
மணி கணக்காய் இதமாக
மனம் பரிமாறி கொண்டனர்
விண்காதலனும் மண் காதலியும்
எப்போதாவது இணைப்பு கொடுக்கும்
மழை தொலை பேசி சேவையில்…

ஒதுக்கம்



வெறுமை தாழ் கொண்டு
தனிமை சிறைக்குள் பூட்டி கொண்ட
சூழ்நிலை கைதி அவள்
கண்மை கொண்ட கண்களுக்குள்
பெண்மையின் அருவி அவள்
கனா இழந்த விடியல்கள் அவள்
கண்ணீர் இழந்த விழிகள் அவள்
வரண்ட புன்னகை இழந்த இதழ்கள் அவள்
ஆரவாரமில்லாத அமைதி அவள்
சொல்லிழந்த கவி அவள்
இசையிழந்த மௌனம் அவள்
ஆசைகள் இழந்த ஆகுதி அவள்
சுவர் கண்ணாடியில் தனித்து சிரித்து பார்க்கும்
விசித்திரம் அவள்
குழாயில் சிதறும் நீருடன் கதறி பார்த்தும்
கண்ணில் நீர் கோர்க்காத பரிதாபம் அவள்
புள்ளினம் கூட ரகசியம் பேசும் அதிசயம் அவள்
மின்னல் மழையின் பள்ளித் தோழி அவள்
வெள்ளி நிலவின் புன்னகை வெளிச்சம் அவள்
காட்டு பாதையில் வீட்டு ரோஜா அவள்
புல்லாங்குழலின் மெல்லிசை மோகனம் அவள்
ஒற்றையாகி போன அன்றில் பறவை அவள்
விளக்கினை நாடாத விட்டில் விசித்திரம் அவள்
கடினமான வாழ்க்கை விடுகதையின்
இலகுவான பதில் அவள்
அவசர உலகில் இருந்து
வலியின்றி ஒலியின்றி
அழகாக ஒதுங்கி கொண்டதால்…..

23 December 2009

தொலைந்த காதல்



மாலைநேர தென்றல்
சாலையோர தெருவிளக்கு
அலைகரை மணல்வீடு
சோலையிளம் தென்னங்கீற்று
மலைச்சாரல் வெண்ணிலவு
தலை சாய்க்கும் சாளரக்கம்பி
சிலையில் உளி செதுக்கிய கண்ணீர் துளி
சேலையில் தப்பிக்கொண்ட நான்காவது மடிப்பு
வேலை நேரத்தில் கூட தோன்றும் வெறுமை
தொலை பேசியில் மின்னி மறையாத உன் எண்கள்
தொலைந்த காதல் சொல்லின இவையெல்லாம் சொல்லாமல்
இலையுதிர் கால சருகுகள் போல நான்
பாலை நிலத்தில் காய்ந்து போன மழைத்துளியாய் நீ..

22 December 2009

காதல் கடிதம் 1


காகிதம் இல்லை…
பேனா மை இல்லை
எழுதுகிறேன் உனக்கொரு கடிதம் இங்கு நான்
உன் வருகை கண்டு
கன்னத்து நாண சிவப்பு
வண்ணக்காகிதமாக…
விழிகளின் அசைவுகள்
வார்த்தைகளாக…
ஒவ்வொரு இமைத்துடிப்பும்
சொற்களிற்கு பொருள் தரும் வண்ணம்
இடைவெளிகளாக..
தோன்றிய சின்ன புன்னகைகள்
ஒவ்வொரு வசனத்துக்கும் முற்று புள்ளியாக..
இதயத்தில் ஒவ்வொரு துடிப்பும்
அதிகரிக்கும் வேகம்
என் காதலின் ஆழம் இயம்ப…
பஞ்சு விரல்களில் தோன்றும்
சின்ன நடுக்கம்
என் காதல் சொல்ல தமிழில் வார்த்தைகள்
போதவில்லையே என்ற தவிப்பாக
செல்ல சிரிப்புடன் கவிழும் வதனம்
காகித மடிப்பாக
இதழ் கடித்தேன்
என் அஞ்சலுறை
ஒட்டி கொள்ள
ஒட்டிய வினாடி என்
கண்ணின் கடையில்
துருத்திய ஒற்றை துளி
உன் விலாசம் எழுதியது….
ஆனால் நான் நீட்டிய அஞ்சல் காணாமல்
எனை நீ தாண்டி சென்றாய்..
“மக்கு காதலனே !!! “
என மனதுக்குள் வைது கொண்டேன்.
முதல் காதல் கடிதம் சேரவில்லையே என்ற
தவிப்புடன்…..

21 December 2009

ரகசியம்


காரிருளில் வானவில்
குருடன் கவிஞனான போது..
அலை கடலில் தித்திப்பு
தண்ணீரெல்லாம் உப்பாகிய போது..
மௌனம் கூட தாலாட்டு
ஊமை அன்னையாகிய போது..
பட்டாம் பூச்சி கூட காதலன்
பூக்கள் காதல் கொண்ட போது…
பஞ்சு தலையணை கூட முள் மடி
மனைவி ஊடல் கொண்ட போது…
தூறல் கூட மழை தெய்வம்
விவசாயியின் பயிர் உடல் நனைத்த போது..
தனிமையெல்லாம் நரகம்
பள்ளி விடுமுறையில் நட்பு பிரிந்த போது..
நட்பெல்லாம் நரகம்
புதிதாக வந்த காதல் உடல் சிலிர்த்த போது…
மூச்சு காற்று கூட ரகசியம்
கன்னிக்கு காதல் வந்த போது….

20 December 2009

என் சேரி தேவதை


“அம்மா….!!! எப்பம்மா நான் ஸ்கூலுக்கு போலாம்??? “
ஆரவாரமில்லாத அமைதியான குரலில்
ஏக்கமா எதிர்பார்ப்பா
பரபரப்பா பரிதவிப்பா
இதில் எதுவென இனம் காண முடியாத
மழலையில் மிழற்றினாள்
என் ஆறு வயது நிரம்பிய அழகு மகள்
வாரப்படாத முடியிலும்
வாரக்கடைசியில் பெய்த மழையில் அலசிய ஆடையிலும்
அசாத்தியமாக பளபளத்த கண்களுடன் கேட்டாள்.
இலகுவான கேள்வி, ஆம், இல்லை என்ற இரு சொல்லில்
ஒன்றில் இலகுவாக சொல்லிவிடலாம்.
ஆனால் இரண்டில் எதுவும் என்னால் இயலவில்லை
”கஞ்சி குடிக்க வாறியா கண்ணம்மா????” என்றேன்
ஓடிவந்து உட்கார்ந்து
” நான் நல்லா கஞ்சி குடிச்சி நல்லா வளந்து
ஸ்கூலுக்கு போனா
பின்னால அதில நீயும் நானும் போலாம்மா!!!! ..”
தன் பிஞ்சு விரலொன்றை விண்ணில் நீட்டிய
வண்ணம் விளம்பினாள்
விண்ணில் சென்ற விமானப் பறவையை
நோக்கி தன் எதிர் கால கனவு சிறகுகளை விரித்த வண்ணம்…
விழிகளுக்குள் வலிக்க அவளை வாரியணைத்து கொண்டேன்.

ஒரு சாலையின் ஓரத்தில்
காட்டுதனமாக வளர்ந்த மரத்தடியில்
நான்கு தடி மேல் ஒரு தகரம்
என குறைந்தது முப்பது முகவரிகள்
அதில் ஒன்று எனக்கும் என் மகளுக்கும்

வறுமையை உணரவில்லையா???
இல்லை உணர்ந்து கொண்டாளோ???
எனக்கு தெரியவில்லை
ஆனால் அவள் விழியில் கனவுகள்
தேடல்கள் ஆதங்கங்கள்
பூவிதழில் பனித்துளி போல் அழகாக…
நான்கு வயதில் ஓர் நாள் கேட்டாள்
“ஏம்மா எனக்கு அப்பா இல்ல?? “
என் கன்னிமை இழந்த கதை சொல்லும் வகை
தெரியாமல் விழி நனைய
“உனக்கு அம்மா இருக்கேம்மா!!!! “ என்றேன்
என் விழி துடைத்து கேட்டாள்
“ஏம்மா எனக்கு பேரில்லை?? “
இதயத்தில் வலி ஒன்று ஓடியது
”நீ என் கண்ணம்மா…” என்றேன்
கட்டியணைத்து முத்தம் தந்தாள்
என் கண்ணம்மா…
எண்ண கதவுகளில் இருந்து வெளி வந்து
என் கைகளிற்குள் இருந்தவளை
விடுவித்தேன்

என் சின்னக் குருவிக்கு சிறகு முளைத்தது
வறுமைக்குள் கனவு வந்தது
என் தாய்மைக்கு விழி நனைந்தது
விடை காண முடியாமல்…..
“அம்மா …நான் ரீச்சராகணும்மா!!!
அப்பதான் என்னை மாதிரி எல்லாருக்கும்
பள்ளி கூடம் இல்லாம பாடம் சொல்லிதரலாம்…”
என்றாள் தன் கஞ்சிக்குள் எங்கே இருக்கின்றது
என்றே தெரியாத ஒரு பருக்கை
சோறை எறும்புக்கு வைத்தபடி….
எனக்கு பதில் தெரிந்தது
என் தந்தையின் குடி மயக்கத்திலும்
தாயின் மனவொடுக்கத்திலும்
ஒடிந்த என் கனவுகள்
என் மகளுக்கும் ஒடிய கூடாது.
அவளின் கனவு என் தவம்…
அவள் பள்ளியுடை அணிய
நான் வேலைக்காரியாகினேன்
கூலிக்காரியாகினேன்
தெருக் கூட்டினேன்
முதலாம் வகுப்பில் முதலாவதாக வந்தாள்
என் சேரி தேவதை….!!!!!!

19 December 2009

காதலித்து பார்த்தேன்


காதலித்து பார்த்தேன்
அஸ்தமனங்கள் கசத்தன
பிரிய வேண்டுமே என்ற தவிப்பில்
விடியல்கள் இனித்தன
சந்திப்புகளின் புத்துணர்ச்சியில்
கண்ணாடிக்கு கண் வலித்தது
அழகு பார்த்த மணி நேரங்கள் அதிகரித்ததால்
தொலைபேசிக்கு செவி வலித்தது
மீண்டும் மீண்டும் பரிமாறிய அதே காதல் வார்த்தைகளால்
தலையணைக்கு கழுத்து வலித்தது
கட்டியணைத்த வேகங்களை தாங்க முடியாமல்
மழைதூறலாய் மலர்சாலையாய்
உனக்குள் என்னை ஆயுள் கைதியாக்கி கொண்டேன்
எதிர்காலம் இனித்தது இன்ப கனவுகளில்
கூட்டங்களும் கூச்சல்களும் கசத்தன
தனிமை பிடித்தது
தனிமையில் புன்னகைக்க பிடித்தது
பூக்கள் பிடித்தது
பனித்துளி பிடித்தது
மொத்தத்தில் பைத்தியம் பிடித்தது
காலச்சக்கரத்தில் காட்சிகள் புதைந்தன…
ஊமைக்கனவுக்கும் முடிவு வந்தது

வண்ண நிலவின் தவங்கள்
வனாந்தரங்களிலும் பாலை நிலங்களிலும்
ஒளி பொழிவது போல்
மாட மாடங்களிலும் பூக்களின் சோலையிலும்
ஒளி பொழிவது இயற்கை…
ஒரு பூவில் தேன் கண்ட வண்ணத்து பூச்சி
அடுத்த மலர் தாவுவதும் இயற்கை
இயற்கையை தவறு சொல்ல இயலாததால்
இதுவரை நேசித்த அத்தனையுடனும்
என்னையும் சேர்த்து வெறுக்கிறேன்
தண்டனையாய்
ஆனால் அடி மனதின் உள்ளிருட்டில்
உண்மை கண்டேன்..
எங்கு தோற்றேன் என்று தெரியாமல்
ஏன் தோற்றேன் என்று அறியாமல்
பிரிவுடன் மரத்து போனது
இதயம் மட்டும் அல்ல அத்தனை
புலன்களும் என்று
விழிகள் திறந்த விடியல்கள் புரியாமல்
இருட்டுக்குள்ளே
அடையாளமாய் நானும்
காதலித்து பார்த்தேன்

மணப்பெண் 2


மொட்டுக்குள் ஒளிந்திருந்த நறுமணம்
இதழ் விரிக்கும் பூவிற்கு அடையாளம்
தரிசு நிலத்தில் தோன்றும் மண் வாசம்
நிலம் தீண்டிய மழைத்துளிக்கு அடையாளம்
தனிமையான தருணங்களில் கூட
என் கன்னத்தில் தோன்றும் புன்னகை குழி
மனதின் மையத்தில் மையமிட்டிருந்த காதலின் அடையாளம்

அன்று என்னருகே கல்லென இருந்த கணவனில்
இன்று கிழக்கில் தோன்றும் சூரியனை போல
சாசுவதமான காதல்
ஆழத் தூங்குகையில் ஆதரவான ஒரு கரம்
அணைத்து கொண்டிருந்தால் காதல் தோன்றுமோ?
வயல் வெளி பாதைகளில் குடை துறந்து
மழைப்போர்வை போர்த்து கொள்ள துணை வந்தால் காதல் தோன்றுமோ?
மொட்டை மாடி நிலவில் தோளணைத்து
தன் தோல்வியடந்த காதலை சொன்னால் காதல் தோன்றுமோ?
கால் தழுவி செல்லும் அலைகளுடன்
நடந்து செல்கையில் விரல் கோர்த்து கொண்டால் காதல் தோன்றுமோ?
என்னை அறியாமல் ஏதோ ஒரு அற்புதமான நொடியில்
பூத்தது இளம் காதல்..
தளைகள் உடைந்தன..
இருளாக தோன்றிய எதிர்காலம்
மூன்றெழுத்து சாதாரணமான வார்த்தைக்குள்
என்னவனுடன் இணைந்து விட்டதால்
ஒவ்வொரு விடியலும் அழகாக தெரிந்தது.
மனைவி, மருமகள், அண்ணி என மருட்டிய
விதிமுறைகள் காதலி, மகள், சகோதரி
என உரிமை நிறைந்த புது உறவுகளுக்குள்
கை கோர்த்து கொண்டன.
கன்னத்தில் முத்தமிட்டு கையசைத்த
கணவனின் விழியுயர்த்தி பார்க்கையில்
இன்றும் கரித்தது
ஆனந்தத்தில்.

18 December 2009

மணப்பெண் 1


எட்டு மணி வரை உறங்கியதற்காக
அன்னையிடம் ஒரு குட்டையும்
ஆவி பறக்கும் காலைத் தேனீரையும்
வாங்கிக் கொண்டு
தந்தையுடன் நாளேடுகள் அலசிக் கொண்டதும்
குளியலறைக்கு செல்வதற்குள் தம்பியுடன்
ஓர் உள் நாட்டு யுத்தத்துக்கும்
உண்ணா விரத போராட்டத்துக்கும்
ஒத்திகை போட்டு கொண்டதும்
வயல் வெளியில் குடை எறிந்து
மழை போர்வையை போர்த்தி கொண்டதும்
கிணற்றடியில் உட்கார்ந்து கொண்டு
நட்சத்திரங்களை கணக்கெடுத்து கொண்டதும்
உலகக் கிண்ண போட்டிகளுக்காக
தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்து
உச்சி வானம் அதிர அலறிக் கொண்டதும்
தோழிகளுடன் உட்கார்ந்து படிப்பதாக
நடித்து கொண்டதும்
தோட்டத்து பூக்களுக்கெல்லாம் அழகி போட்டி
வைத்து மல்லிகையை அழகு ராணியாக்கி கொண்டதும்
நினைவு திரையில் இசையின்றி
ஒளி பரப்பாகிக் கொண்டிருந்தது
நிறுத்த மனமின்றி வெறித்து கொண்டிருந்தேன்
மண மேடையில் அமர்ந்த படி
நாடக மேடை மறைப்பாக தலையை
நாணப் போர்வைக்குள் கவிழ்த்து கொண்டு…
நேற்று வரை சுதந்திர வானில்
சுற்றி திரிந்த தந்தையின் சின்ன மகள்
நாளை முதல் ஒருவனின் மனைவி
ஒரு குடும்பத்தின் மருமகள்
இருபதையொட்டிய வயதினரின் அண்ணி
இவர்கள் தான் இனி என் குடும்பம்
இவர்கள் வெறுப்பை தேடிக் கொள்ளக்கூடாது
புதிதாக முளைத்த விதி முறைகள் மருட்டின
திசை தெரியாத இருளாக இருந்தது
சுற்றிலும்
இவன் தான் விடியலோ என்று
விழியை லேசாக உயர்த்தி ஏறிட்டேன்
கணவனாக போகின்றவனை
கல்லாக உட்கார்ந்திருந்தான்
என் கண்களுக்குள் கரித்தது.

யாரோ??


இலக்கணத்துக்கும் இலக்கியத்துக்கும்
இடையில் சிக்கி கொண்ட எழுத்து பிழை
ஆகாயத்துக்கும் அலைகடலுக்கும்
இடையில் சிக்கி கொண்ட தொடுவானம்
மலை முகட்டுக்கும் மழை முகிலுக்கும்
இடையில் சிக்கி கொண்ட காட்டு தாவரம்
சாளர சுவரில் அமர்ந்து கொண்டு
இப்படியெல்லாம் என்னை எண்ணிக் கொள்வேன்
தன்னிரக்கம் தலை விரித்தாடும் பொழுதுகளில்.

ஆழ்ந்த உறக்கங்களில் கனவுகள் இல்லை
பூக்கள் செறிந்த சாலையில் வண்ணத்து பூச்சிகள் இல்லை
ஆல மர நிழலில் விழுதுகள் இல்லை
நதியில் மிதக்கும் படகுகளில் துடுப்புகள் இல்லை
இவையெல்லாம் ஏன் இல்லை என எண்ண தோன்றவும் இல்லை

காதல் காமம் கண்ணீர் கனவு
எல்லாம் கடந்த மோனமாகி
எங்கேயோ தொலைந்த என்னை மட்டும்
இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன்
சூரிய கதிரில் அலைகடலில்
வயல் வெளியில் மலைத் தொடரில்
ஆழ்ந்த நிசப்தத்தில்…
ஆனால்
தெளிவிழந்த தேடல்கள் கொணர்ந்த
அசாத்தியமான தனிமையையும்
ஆரவாரிக்கும் அடி மனதையும் அடக்க
அதிகாலை பனித்துளி
தொட முடியாத வானவில்
தொலைதூர நட்சத்திரம்
ஒற்றையாகவே உலாவரும் வெண்ணிலா
புது மழை சொரியும் வானம்
மழலை மொழிகள்
அந்தி செவ்வானம்
இத்தனைக்கும் தோழியாக என்னை
அறி முகப்படுத்தி கொள்கிறேன்
தற்காலிகமாக
தோல்வியை ஒப்பு கொள்ள முடியாததால்..

14 December 2009

தாய்மை


சின்னஞ் சிறு சாரல் அவள்
வெண் பஞ்சு குவியல் அவள்
கதை சொல்லும் கண்கள்
ஈரமான இதழ்கள்
ரோஜா பூக்கும் கன்னங்கள்
சிரிக்கையில் சிதறும் முத்துகள்
அவ்வளவு அழகாக இருந்தாள்
என் மூன்று வயது மகள்
நான் கைக்குள் சிறைப்படுத்தியிருந்த
நிழல் படத்தில்
எத்தனை அழகான மகள் என் மகள்
அவள் இனி இல்லையாம்
அதை நான் நம்பவும் வேண்டுமாம்
அவளின் தேவதை கனவுக்குள் நான்
சிறகு விரித்திருந்த வேளை
அருகிலிருந்தவள்
நான் விழித்து பார்க்கையில்
வெண்ணிற பூக்குவியல் புனைந்த ஆடையுடன்
ஒரு பெட்டிக்குள்
நான்கு நாள் தாடியுடன் என் கணவன்
நான் விழித்ததும் வீறிட்டு அழுத என் தாய்
ஏன் என என் விழியில் எழுந்த வினாவுக்கு
ஆதரவாக தோள் தடவி அப்பா சொன்னார்
விபத்தாம் என்று
விழிகளில் நீர் கோர்க்கவில்லை
வினாக்களே தோன்றியது
நம்ப முடியாத அதிசயம் என்று ஏதாவது
உண்டு என்றால் அது இது தான்
துள்ளி விளையாடும் மகளை
தூக்கி செல்ல காலன் கடினமானவன் இல்லை
என அடித்து சொல்லியது மனம்
இன்றுடன் ஒரு மாதமாகிறது
அவளை தேடி அலைந்து கொண்டிருக்கின்றேன்
ஒரு தெரு முனையிலாவது
அவள் நிற்க மாட்டாளா
என்று!!!!!

08 December 2009

நிமிர்வு


மாம்பழ தும்பியும் பலாப்பழ தும்பியும்
தம்பியுடன் போட்டி போட்டு பிடித்த நாட்களும்
ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை
ஊரே கேட்கும் படி வரும் ஐஸ்கிரீம் வானுக்கு
எட்டி பார்த்த நாட்களும்
வான் வந்தாலும் வேண்டி தராத அம்மாவில்
வெறுப்புடன் லக்ஸ்பிறேயும் சீனியும் போட்டு
ஐஸ்கிரீம் செய்த நாட்களும்
தேன் முறுக்கு கிடைக்கும் என்று
நெரிசல் கூட சகித்து அப்பாவின் கை கோர்த்து
நல்லூர் தேருக்கு சென்ற நாட்களும்
கடந்து ஆண்டுகள் ஆகிவிட்டது
இளமை கதவில்
அசாத்தியமான தனிமையில் அமர்ந்திருக்கிறேன்
இன்று அனாதையாக
சுனாமி வந்து போனது
என்னை மட்டும் விட்டு விட்டு
என் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு
தொலைந்த சொந்தங்களும்
தொலையாத ஞாபகங்களுமாக தினமும்
கடலலையின் ஒதுங்கும் கிளிஞ்சல்களில்
தொலைந்தவர்களின் தொடு உணர்வு தேடி
தவிக்கின்றேன்.
என்னை சுற்றி எங்கும் நிசப்தம்
கால் தழுவி செல்லும் கடலலையில்
கூட அன்னையின் தாய்மை உணர்ந்து
கால்கள் விறைக்கும் வரை கடலில்
கால் ஊன்றி நின்றதும் உண்டு
வருடிய அவள் கரங்கள் இன்று ஒரு நிழற் படத்தில் கூட
இல்லை என்னிடம்
சிறகு விரித்து பறக்க நினைத்த என்
இலக்குகள்
நத்தை கூட்டினுள் சுருங்கி கொண்டன
பூக்கள் மடியும் போது கனிகளை
விட்டு செல்கின்றன
என் சுவடுகளை விட்டு செல்ல முடியவில்லை
அதிகாலையில் ஒரு நாள்
அப்பா கூறியது ஆழ்மனதில் ஒலித்தது
” போராளி தோற்றாலும்
அவன் வீரம் பேசப்படும்” என்று
நான் மட்டும் போராடாமல் போக மனம்
வரவில்லை
சிந்தனைக்கு சிறகுகளும் இல்லை
கடிவாளங்களும் இல்லை
ஆனால் தொடக்கம் முடிவு தெரியாத
புதிராக இருந்ததது
எங்கு தொடங்க
எதை தொடங்க
தேடிய திசைகளில் எல்லாம் ஆதரவற்ற
ஆகாயமே தெரிந்தது
வெறுமை என்னை வெல்ல விடக்கூடாது என்று
சபதம் மட்டும் எடுத்து கொண்டேன்
போராட்ட களம் தெரியவில்லை
எதை தேடி போராட்டம் என்று தெரியவில்லை
ஆனால் கண்ணுக்கு தெரியாத
அமானுசிய இருட்டில் ஏதோ ஒரு
சக்தியை எதிர்க்க எண்ணிக் கொண்டேன்
என் காலடி தடங்களை இன்று
அலை எடுத்து சென்றாலும்
என் வாழ்வின் தடங்களை
யாரும் எடுத்து செல்ல விட மாட்டேன்.

குற்றவாளி


மாலை மறைவில் அழுத்திய கரங்கள்
என் கன்னங்களில் சிவப்பையும்
கண்களில் கனவுகளையும்
தேக்கி விட
அழகாக புன்னகைத்து கொண்டிருந்தேன்
என்னை தன்னவளாக்கி கொண்டவனின் அருகில்
ஒரு நிஜத்தின் நிழற்படத்தில்
அப்பா அம்மா இல்லாமல்
பாட்டியுடன் இருந்த எனக்கு
காதல் வரக்கூடாது என்ற
விதிமுறை எதுவும் இல்லையே
இளம் மாலை பொழுதில்
இயற்கையின் ரம்மியங்களாக
தோன்றிய காதல் எதிர்ப்புகள்
பல தாண்டி
அன்று விழாக் கோலம் கண்டது
கர்ம வீரன் போல தோன்றினான் என் கணவன்
”என்ன செய்ய போகிறோம்???” என்ற இறுக்கம்
தளர்ந்ததாலோ என்னவோ பாட்டி கூட
இறைவனிடம் சென்று விட்டாள்
என் பூமியில் சொர்க்கம் தோன்றியதும்
சின்ன சின்ன ஊடல்களும்
பொங்கி பெருகும் காதலுமாக
நகர்ந்த நாட்களில்
நான் தாய் ஆனதை கூட நம்ப முடியவில்லை
ஓர் பொல்லாத நாளில்
நிலா வானை ரசித்திருந்த வேளையில்
மூன்று முன் பின்னறியாத முகங்கள்
தோன்றியது இரு நொடியோ ஒரு யுகமோ
ஆனால் மறையும் போது
என் உலகத்தை மட்டும் தலை கீழாக்கி விட்டுதான்
மறைந்தது
கைகளில் வீறிட்ட மகன்
கூட தூரத்தில் எங்கோ அருவமாக தோன்றினான்
அத்தனையும் ஸ்தம்பித்து கொண்டது என் உலகில்
ஏனெனின் செங்குருதிக்குள் உயிரிழந்திருந்தவன்
என் உயிரென நான் எண்ணிக் கொண்டு இருந்தவன் அல்லவா!!!!
மீண்டும் ஒரு தடவை அனாதையாக்கப் பட்டேன்
இன்று என் மூன்றாவது திருமண நாள்
கண்ணுக்கு தீட்டிக் கொண்டேன் கண்மையை அழகாக
உற்று நோக்கிய மாமியாரின் பார்வை இடித்துரைத்தது
“எவனை மயக்கவோ? “ என்பது போல
அவளுக்கென்ன தெரியும்
நான் மையிடாத நாட்களில்
என்னை பார்க்க மாட்டேன் என்று அடம் பிடிப்பான்
காதலுடன் அவள் மகன் என்று.

முதிர் கன்னி






















இன்று அந்தியில் சாயும் கதிரவனுடன்
என் முப்பதாவது வயதும் சாய்ந்துவிடும்
முப்பத்தியொன்றை தொடும் நான்
ஒரு முதிர்கன்னி
கல்யாண சந்தையில் மட்டும் விலை
போகாத சித்திரம்
பொன்னோடும் பொருளோடும்
பிறந்திருந்தால் ஒருவேளை….
காதல் கொண்டு தங்கையை போல
ஓடிப்போயிருந்தால் ஒருவேளை...
வெளி நாட்டில் மாமாவும் சித்தப்பாவும்
இருந்திருந்தால் ஒருவேளை….
இந்த எல்லா இருந்திருந்தால்களும்
இல்லாதிருந்ததாலும்…
எல்லாம் தாண்டி ஏழரையில் தூங்கிய
செவ்வாய் மட்டும் இருந்ததாலும்
தந்தையின் நரை தாண்டிய தள்ளாமை கூட
காலாவதியாகிய கடைப்பொருளை
பார்க்கும் கடைக்காரனை போல்
சலிப்பாக பார்க்கிறது….
”உன்னுடன் படித்த மாலதிக்கு
இரண்டாவதும் பெடியனாம்..”
சலித்து கொண்டாள் அம்மா
இரவல் கனவில் மாலதி சிரித்தாள்
தாய்மை பூரிப்புடன்
ஏக்கங்கள் கடலலை போல் ஆரவாரிக்க
விழித்த நான் இரவின் முடிவு வரை
ஒற்றை தலையணையில் முகம் புதைத்து கொண்டேன்..
பள்ளி முடிகையில் சைக்கிள் பாஸ்கற்றில்
கடிதம் போட்ட சைக்கிள் கடைக்காரன் கூட
அநியாயத்துக்கு நினைவு வந்தான்
ஒருவேளை அவனை மறுத்தது கூட தவறோ
என்று எனக்குள் மரித்து போனதாய் எண்ணியிருந்த
மக்கு மனம் வினா தொடுத்தது….
அவனுக்கு இப்ப ரவுணுக்குள்
சொந்தமா கடையும் ஒரு பிள்ளையுமாம்
கரியும் கட்டயுமாய் நின்றவன்
விழிகள் திறந்திருந்த இருட்டுக்குள் சிரித்தான்.
தந்தையின் பெல்ற்றுக்கு பயந்து ஒளிந்த கனவுகள்
தங்கைக்கு பின்னாவது தோன்றியிருக்கலாம்
ஓடிப்போனாள் என்று குதித்த அப்பா கூட
இப்ப பேரனை கண்டதும் அடங்கி விட்டார் தாத்தாவாக…
இலக்கற்று நான் மட்டும்
நாளைய மூன்றாம் வகுப்பு பரீட்சை வினாத்தாள்
திருத்த வேண்டும் என்று இறுதியில் எண்ணிக் கொண்டேன்
நானும் ஒரு பட்டதாரி ஆசிரியை அல்லவா???
அதிகாலையின் முப்பத்தியோராவது வயதில்
கேட்டுக்கொண்டேன் ஏன் எனக்கென்று ஒரு குடிகாரனை
கூட படைக்காமல் விட்டாய் என்று….

என் அம்மா





















அதிகாலையில் அலாரம்
விழிக்கும் முன்னரே தான் விழித்து
அவசர அவசரமாக பிட்டும்
சம்பலும் செய்து வைத்து விட்டு
ஐந்து மணி சேவல் கூவும்
முன் பின் வளவு துரவில்
ஊற வைத்த நானூறு கிடுகுகளையும்
நளினமாக பின்னிவைத்து விடுவாள்
ஏழு மணிக்குள்
ஏழு மணிக்கு விழிக்கும் ஆறு வயது
மகளுக்கு அடுக்குகள் அனைத்தும் செய்து
ஒன்பது மணிக்கு
உண்டு விட்டு நூறு தேங்காய்களை
கடப்பாரையில் உரித்து
கடகத்தில் வைத்து
தலையில் சுமந்து கொண்டு
சந்தையில் விற்று விடுவாள்.
பனிரெண்டு மணிக்கு வீடு வந்து
அடுத்த சமையல் செய்து பருத்திதுறையில்
படிக்கும் அண்ணனுக்கு மதிய ஆகாரம்
அனுப்புவாள் தட்டி வான் காரனிடம்
கொடுத்து
அத்தனை பனை மட்டைகளையும்
மருதாணி பூசாமலே கைகள் சிவக்க
வெட்டி ஒன்று
ஐம்பது சதத்துக்கு விற்றாள்.
விழுந்த பனம் பழங்களில்
அவள் தலையில் பயணம் செய்யாதவை
மிகச் சிலவே.
வெங்காய பாத்திகளில் வசிக்கும்
மண்புழுக்களை கொல்லாமலே கையால்
பொறுக்கி எடுப்பதில் அவளும் ஒரு ஹை டெக்
விவசாயி
தலையணை உறைகளில் அவள் கை
மயில் பூ போடாமல் அவளுக்கு
தூக்கம் வராது
கால் ஓயாமல் தையல்
இயந்திரத்தில் அவள் உறங்கிப்
போன நாட்களும் உண்டு
பனங் குருத்தில் அவள் செய்த
பாய்களும் ஏழு அடுக்கு பெட்டிகளும்
ஊர் பிரசித்தம்,
ஆனால் உறங்காதது
அவள் கண்கள் தான்
வயல் வரப்புகளில் எல்லாம்
அவள் வலம் வராத இடமே இல்லை.
வயல் விதைப்பது முதல் அறுவடை
அவளும் ஒரு வேலையாள்
சமையல் முதல் சகலமும் அவள் தான்.
இதில் தவணை முறையில் வரும்
தந்தைக்கு ஊறுகாய் முதல்
உப்பு மிளகாய் வரை எல்லாம்
போத்தல்களில்
ஊரில் ஒரு சின்ன மகராணியாம்
அவள் பிறக்கையில்
மணம் முடித்ததும் ஒரு
படித்தவனை தான்
ஆனால் அவள் கண்டதெல்லாம்
தன்னை உருக்கி உருக்கி ஒளி தரும்
மெழுகு வர்த்தி வாழ்க்கைதான்
அவள் உருக்கியவற்றைகளை
சொல்ல என் வாழ் நாள் போதாது
அவள் வடித்த கண்ணீரின்
முன் கடல் நீர் கூட நாணி
கொள்ளும்
ஆனால் அவள் தான்
என் தாய்.
அவள் சிந்திய குருதி
துளிகள் தான் என் எதிர்காலத்தை
இன்னும் வாழ வைக்கிறது
அதனால் அவள் முன்
கடவுள் கூட தலை கவிழ்ந்து
வணங்க வேண்டும் என்பேன் நான்

தனிமை


யாரும் இல்லாத ஊர் உலகம்
உறங்கிய பொழுதில் நீ
விழித்திருந்தால் தனிமை
என்று யார் சொன்னது
ஆயிரம் பேர் நடுவில் கூட
தனித்து நிற்கிறேன்
சுற்றி நடக்கும் காட்சிக்கு
நான் சாட்சியில்லை என்பது போல்...
வானத்திலிருந்து அசுர வேகத்தில்
நீர் ஊற்று பாறையில் விழுந்தும் இறக்காத
மழைத்துளி
இலக்கற்று பாலைவனத்தில்
விழுந்ததால் மடிவது போல
சூனிய சிறைக்குள் சிக்கி
சின்னா பின்னாமடைகிறேன்
காரணம் ஏமாற்ற வேலிக்குள்
என்னையும் என் சிந்தனையையும்
சிறைப்படுத்தி விட்டு
என்னவன் என நான் எண்ணியிருந்தவன்
தன்னவள் என இன்னொருத்தியை
இனம் காட்டியதால்…..
தினம் தினம் ஏற்றப்படும்
சிக்கன சில்லறை சிலுவைகளும்
அதில் வடியும் கண்ணீர் குருதியும்
ஆழ்கடல் மீனின் அழுகை போல்
வலிந்திழுத்த சிரிப்புக்குள்
அடக்கப்பட்டு வெளி வராத ரகசியமாயின,
குருட்டு விழிகளின் கனாக்களும்
இழந்த செவிப்புலனின் இசையும்
நீ என்ற பொய்மைக்கும்
நான் என்ற வெறுமைக்கும்
மத்தியில்
எங்கோ ஒரு கை காட்டி தெருவில்
அசாத்தியமான இனிமையில்…

தேடல்



















பூச்சியரித்த பூக்களிலும்
வாசனை உண்டு
புழுதிப் புயல் வீசும் பாலைவனங்களிலும்
மழை உண்டு
இரைந்து போகும் புகை வண்டி பயணத்திலும்
ரிதம் மாறாத இசை உண்டு
இப்படி எதிலும் இனிமையான தருணங்கள்
தேடும் சிலரும் உண்டு
ஆனால் இப்படியான தேடல்கள்
தீர்ந்ததால்
தேவதைகளை கனவில் தேடி
அதிசயங்களுக்காய்
அந்தி மழை மின்னலை கூட
ஆவலாய் பார்க்கிறேன்…

செல்லரித்த சிலுவை





உன்னை தேடிய என் பயணங்கள்
வினாக்களுக்கும் கனாக்களுக்கும் இடையில்
சிக்கி கொண்டு சிதிலமடைகின்றன.
நதிகளை கரைகளும்
நிலா அசைவுகளை முகில்களும்
தேடுவதில்லை.
ஏகாந்தம் தூண்டிய ஏக்கங்களில்
ஏதோ ஒரு புள்ளியில் உன் நினைவு மட்டும்
உன்னை தேட சொல்லி என்னிடம் ஆர்ப்பரிக்கின்றது
பன்னீர் மழை சொரியும் மேகங்களும்
புன்னகை புரியும் மழலை முத்தங்களும்
என் செங்குருதி சிறு துணிக்கைகளும்
கடைவிழியில் துருத்தி கொண்டிருக்கும்
கடைசி கண்ணீர் துளியும்
உன் வரவுக்காக மட்டும் என் வாழ்வில் காத்திருக்கிறது
ஆனால்
நீ வர மாட்டாய் என்னும் உண்மையும்
நான் உன்னை தேட முடியாது என்னும் பொய்மையும்
ஆகுதியில் கரைந்த உன் ஆதரவு கரங்களுக்காய்
அழுகின்ற என் ஆழ் மனமும்
இனம் தெரியாமல் என்னையும்
செல்லரித்த அதே பழைய சிலுவையில் ஏற்றுகின்றது.

நேற்றைய விதவை

















கல்யாண சந்தையில்
பெயர் மட்டும் தெரிந்தவனின் இடப்புறம் அமர்ந்து
தந்தையின் கடைசி நிலம் மட்டும் அடகு வைத்து
பொற் கொல்லன் செய்த தாலியை
நாணப் போர்வைக்குள் ஏற்றுக் கொண்டு
உணர்வுகளால் எழுத வேண்டிய காதலை
உருவத்தில் மட்டும் ஆண்மகனாக நின்றவனின்
பேடித்தனத்துக்கு காதலியாகி
நான்கு நாட்கள் வாழ்ந்து ஐந்தாம் நாள் விதவையாகி
வாழ்வின் சகல அத்தியாயங்களையும்
வாழ்ந்து விட்டவளாகி
ராசியில்லாதவளாகி
வெள்ளை உடை கொள்ளாத அமங்கலியாகி
எல்லாம் ஆகி முடிந்து விட்டன
ஆனால்
நியாயமான ஆசைகள் கூட
அடக்கப்பட வேண்டிய கட்டாய கதவுக்குள்
அதீதமான ஆசைகள் ஆர்ப்பரிக்கும்
அநியாய கனாக்கள் காண்கிறேன்
அந்தியில் வரும் கற்பனை காதலனுக்காக
செந்திலகம் சூடி நிற்கிறேன்
துள்ளி விளையாடுவாள் சின்ன மகள்
என்ற குருட்டு நம்பிக்கையில்
கரடி பொம்மை வாங்கி சேர்க்கிறேன்
பனியிருளில் மழையிரவில்
சாசுவதமான தனிமையில்
அசாத்தியமான அமைதியில்
உரத்து சிரிக்கின்றேன்
இலையுதிர்கால தெருக்களின் சருகுகள் போல
வரட்சியாக
வாழ்விழந்தவள் நான் என்ற வினோதம் கண்டு
.