28 January 2010

சரணடைந்தேன்…


அற்றை வானின் ஒற்றை விடி வெள்ளியாய்
அவளை கண்டேன்...
கருக்கல் கலைக்கும் கதிர்களின் செல்ல சினத்தில்
அவளை கண்டேன்..
காலை துளியை சிதற விட்ட புல் நுனியின்
புத்துணர்ச்சியாய்
அவளை கண்டேன்...
தாமரை இதழில் ஒரு துளி கவிதையாய்
அவளை கண்டேன்...
ஏரோடும் இடமெல்லாம் தேரோடும் தேவதையாய்
அவளை கண்டேன்...
கார்வானம் சிந்திய தரளங்களும் சிலுசிலுத்த தென்றலும் தழுவ
கச்சை இழந்த பச்சை சேலையில்
அவளை கண்டேன்...
தமிழ் மகள் விழி முதல் மொழி வரை
ஐம்படையுடன் ஆட்சி செய்யும் ஓரரசியாய்
அவளை கண்டேன்...
வெண் சங்கதில் சங்கத்தமிழ் அழகாய்
அவளை கண்டேன்...
மண் மறந்த வான் மலையில்
துள்ளி விழும் நீர் வீழ்ச்சியாய் வெண்கூந்தலாள்
அவளை கண்டேன்...
தென்னங் குருத்தில் வண்டு கொண்ட போதையில்
அவளை கண்டேன்...
சின்ன தாவர தண்டில் தினவெடுத்து
உலகு காண வந்த ஓரிலையின் புது நரம்பில்
அவளை கண்டேன்...
மாலை செவ்வானில் மரகதமாய்
அவளை கண்டேன்..
ஆலகால அந்தபுரத்தில் ஆயிரம் தோழிகளுடன்
ஓர் மதியாய் வதனம் மலர்த்திய
அவளை கண்டேன்...
காணுமிடமெல்லாம் அழகியவளின் தொல்லை
தாளாது இல்லம் அடைந்தேன்..
எத்திசையிலும் இல்லாத அழகுடன் அழகி அவள்
என் மகவின் மழலை சிரிப்பில் விகசித்து நின்றாள்...
நாவிழந்து போன என்,
இரு விழிமடலும் சிறகாக, பறந்தது நெஞ்சம்
கொள்ளை கொள்ளும் அழகி, அவள் வசம்…
சரணடைந்தேன் சக்தியிழந்து…