02 April 2010

அச்சில்...


உடையாத ஒரு நிலவு
உதிராத சில விண் பூக்கள்
வான் கூரையின் கீழ்
உன் மடி சாய்ந்த நான்
என் விரல் விளையாடும் நீ

வெண் நுரை அலை கரை
அந்தி கதிரவன் அகம் நாடும் பொன் மாலை
மணல் வீடு கட்டும் நான்
அலை திருடும் என் வீட்டை பார்த்து நகைக்கும் நீ

ஓர் மதியம்
உயிர் போகும் உணவு வேட்கை
உப்பு மிகைத்த என் சமையல்
ஊறுகாயுடன் உன் சமாளிப்பு

அதிகாலை
ஆறுமணி பறவை
பாத கொலுசு சிணுங்கும் நான்
பள்ளி கலையாத நீ

சாளரம் சில்லிடும் வான் மழை
உயிர் வரை ஊடுருவும் குளிர்
உன் கைவளைவுக்குள் நான்
நீண்ட மௌனத்தின் பின் உன் முத்தம்

வார்த்தையாடும் நான்
நாடி கொதிக்கும் நீ
ஊடலில் உறையும் நிமிடங்கள்
கன்னம் நிறைத்த என் விழி துளிகள்
சினம் மறந்து என் விழி துடைக்கும் நீ

பஞ்சாய் முது நரை
பள்ளி செல்லும் பேர குழந்தை
உறைந்த நம் நெருக்கம்
உறையாத நம் காதல்

என் கனவுகளில்
நாம் வாழும்
ஆயிரம் பிரதிகள்
அச்சில்...
உறக்கம் கலைந்தாலும்
கலைய மறுக்கும் என் கனவுகள்...



++++++++++