08 December 2009

நிமிர்வு


மாம்பழ தும்பியும் பலாப்பழ தும்பியும்
தம்பியுடன் போட்டி போட்டு பிடித்த நாட்களும்
ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை
ஊரே கேட்கும் படி வரும் ஐஸ்கிரீம் வானுக்கு
எட்டி பார்த்த நாட்களும்
வான் வந்தாலும் வேண்டி தராத அம்மாவில்
வெறுப்புடன் லக்ஸ்பிறேயும் சீனியும் போட்டு
ஐஸ்கிரீம் செய்த நாட்களும்
தேன் முறுக்கு கிடைக்கும் என்று
நெரிசல் கூட சகித்து அப்பாவின் கை கோர்த்து
நல்லூர் தேருக்கு சென்ற நாட்களும்
கடந்து ஆண்டுகள் ஆகிவிட்டது
இளமை கதவில்
அசாத்தியமான தனிமையில் அமர்ந்திருக்கிறேன்
இன்று அனாதையாக
சுனாமி வந்து போனது
என்னை மட்டும் விட்டு விட்டு
என் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு
தொலைந்த சொந்தங்களும்
தொலையாத ஞாபகங்களுமாக தினமும்
கடலலையின் ஒதுங்கும் கிளிஞ்சல்களில்
தொலைந்தவர்களின் தொடு உணர்வு தேடி
தவிக்கின்றேன்.
என்னை சுற்றி எங்கும் நிசப்தம்
கால் தழுவி செல்லும் கடலலையில்
கூட அன்னையின் தாய்மை உணர்ந்து
கால்கள் விறைக்கும் வரை கடலில்
கால் ஊன்றி நின்றதும் உண்டு
வருடிய அவள் கரங்கள் இன்று ஒரு நிழற் படத்தில் கூட
இல்லை என்னிடம்
சிறகு விரித்து பறக்க நினைத்த என்
இலக்குகள்
நத்தை கூட்டினுள் சுருங்கி கொண்டன
பூக்கள் மடியும் போது கனிகளை
விட்டு செல்கின்றன
என் சுவடுகளை விட்டு செல்ல முடியவில்லை
அதிகாலையில் ஒரு நாள்
அப்பா கூறியது ஆழ்மனதில் ஒலித்தது
” போராளி தோற்றாலும்
அவன் வீரம் பேசப்படும்” என்று
நான் மட்டும் போராடாமல் போக மனம்
வரவில்லை
சிந்தனைக்கு சிறகுகளும் இல்லை
கடிவாளங்களும் இல்லை
ஆனால் தொடக்கம் முடிவு தெரியாத
புதிராக இருந்ததது
எங்கு தொடங்க
எதை தொடங்க
தேடிய திசைகளில் எல்லாம் ஆதரவற்ற
ஆகாயமே தெரிந்தது
வெறுமை என்னை வெல்ல விடக்கூடாது என்று
சபதம் மட்டும் எடுத்து கொண்டேன்
போராட்ட களம் தெரியவில்லை
எதை தேடி போராட்டம் என்று தெரியவில்லை
ஆனால் கண்ணுக்கு தெரியாத
அமானுசிய இருட்டில் ஏதோ ஒரு
சக்தியை எதிர்க்க எண்ணிக் கொண்டேன்
என் காலடி தடங்களை இன்று
அலை எடுத்து சென்றாலும்
என் வாழ்வின் தடங்களை
யாரும் எடுத்து செல்ல விட மாட்டேன்.

குற்றவாளி


மாலை மறைவில் அழுத்திய கரங்கள்
என் கன்னங்களில் சிவப்பையும்
கண்களில் கனவுகளையும்
தேக்கி விட
அழகாக புன்னகைத்து கொண்டிருந்தேன்
என்னை தன்னவளாக்கி கொண்டவனின் அருகில்
ஒரு நிஜத்தின் நிழற்படத்தில்
அப்பா அம்மா இல்லாமல்
பாட்டியுடன் இருந்த எனக்கு
காதல் வரக்கூடாது என்ற
விதிமுறை எதுவும் இல்லையே
இளம் மாலை பொழுதில்
இயற்கையின் ரம்மியங்களாக
தோன்றிய காதல் எதிர்ப்புகள்
பல தாண்டி
அன்று விழாக் கோலம் கண்டது
கர்ம வீரன் போல தோன்றினான் என் கணவன்
”என்ன செய்ய போகிறோம்???” என்ற இறுக்கம்
தளர்ந்ததாலோ என்னவோ பாட்டி கூட
இறைவனிடம் சென்று விட்டாள்
என் பூமியில் சொர்க்கம் தோன்றியதும்
சின்ன சின்ன ஊடல்களும்
பொங்கி பெருகும் காதலுமாக
நகர்ந்த நாட்களில்
நான் தாய் ஆனதை கூட நம்ப முடியவில்லை
ஓர் பொல்லாத நாளில்
நிலா வானை ரசித்திருந்த வேளையில்
மூன்று முன் பின்னறியாத முகங்கள்
தோன்றியது இரு நொடியோ ஒரு யுகமோ
ஆனால் மறையும் போது
என் உலகத்தை மட்டும் தலை கீழாக்கி விட்டுதான்
மறைந்தது
கைகளில் வீறிட்ட மகன்
கூட தூரத்தில் எங்கோ அருவமாக தோன்றினான்
அத்தனையும் ஸ்தம்பித்து கொண்டது என் உலகில்
ஏனெனின் செங்குருதிக்குள் உயிரிழந்திருந்தவன்
என் உயிரென நான் எண்ணிக் கொண்டு இருந்தவன் அல்லவா!!!!
மீண்டும் ஒரு தடவை அனாதையாக்கப் பட்டேன்
இன்று என் மூன்றாவது திருமண நாள்
கண்ணுக்கு தீட்டிக் கொண்டேன் கண்மையை அழகாக
உற்று நோக்கிய மாமியாரின் பார்வை இடித்துரைத்தது
“எவனை மயக்கவோ? “ என்பது போல
அவளுக்கென்ன தெரியும்
நான் மையிடாத நாட்களில்
என்னை பார்க்க மாட்டேன் என்று அடம் பிடிப்பான்
காதலுடன் அவள் மகன் என்று.

முதிர் கன்னி






















இன்று அந்தியில் சாயும் கதிரவனுடன்
என் முப்பதாவது வயதும் சாய்ந்துவிடும்
முப்பத்தியொன்றை தொடும் நான்
ஒரு முதிர்கன்னி
கல்யாண சந்தையில் மட்டும் விலை
போகாத சித்திரம்
பொன்னோடும் பொருளோடும்
பிறந்திருந்தால் ஒருவேளை….
காதல் கொண்டு தங்கையை போல
ஓடிப்போயிருந்தால் ஒருவேளை...
வெளி நாட்டில் மாமாவும் சித்தப்பாவும்
இருந்திருந்தால் ஒருவேளை….
இந்த எல்லா இருந்திருந்தால்களும்
இல்லாதிருந்ததாலும்…
எல்லாம் தாண்டி ஏழரையில் தூங்கிய
செவ்வாய் மட்டும் இருந்ததாலும்
தந்தையின் நரை தாண்டிய தள்ளாமை கூட
காலாவதியாகிய கடைப்பொருளை
பார்க்கும் கடைக்காரனை போல்
சலிப்பாக பார்க்கிறது….
”உன்னுடன் படித்த மாலதிக்கு
இரண்டாவதும் பெடியனாம்..”
சலித்து கொண்டாள் அம்மா
இரவல் கனவில் மாலதி சிரித்தாள்
தாய்மை பூரிப்புடன்
ஏக்கங்கள் கடலலை போல் ஆரவாரிக்க
விழித்த நான் இரவின் முடிவு வரை
ஒற்றை தலையணையில் முகம் புதைத்து கொண்டேன்..
பள்ளி முடிகையில் சைக்கிள் பாஸ்கற்றில்
கடிதம் போட்ட சைக்கிள் கடைக்காரன் கூட
அநியாயத்துக்கு நினைவு வந்தான்
ஒருவேளை அவனை மறுத்தது கூட தவறோ
என்று எனக்குள் மரித்து போனதாய் எண்ணியிருந்த
மக்கு மனம் வினா தொடுத்தது….
அவனுக்கு இப்ப ரவுணுக்குள்
சொந்தமா கடையும் ஒரு பிள்ளையுமாம்
கரியும் கட்டயுமாய் நின்றவன்
விழிகள் திறந்திருந்த இருட்டுக்குள் சிரித்தான்.
தந்தையின் பெல்ற்றுக்கு பயந்து ஒளிந்த கனவுகள்
தங்கைக்கு பின்னாவது தோன்றியிருக்கலாம்
ஓடிப்போனாள் என்று குதித்த அப்பா கூட
இப்ப பேரனை கண்டதும் அடங்கி விட்டார் தாத்தாவாக…
இலக்கற்று நான் மட்டும்
நாளைய மூன்றாம் வகுப்பு பரீட்சை வினாத்தாள்
திருத்த வேண்டும் என்று இறுதியில் எண்ணிக் கொண்டேன்
நானும் ஒரு பட்டதாரி ஆசிரியை அல்லவா???
அதிகாலையின் முப்பத்தியோராவது வயதில்
கேட்டுக்கொண்டேன் ஏன் எனக்கென்று ஒரு குடிகாரனை
கூட படைக்காமல் விட்டாய் என்று….

என் அம்மா





















அதிகாலையில் அலாரம்
விழிக்கும் முன்னரே தான் விழித்து
அவசர அவசரமாக பிட்டும்
சம்பலும் செய்து வைத்து விட்டு
ஐந்து மணி சேவல் கூவும்
முன் பின் வளவு துரவில்
ஊற வைத்த நானூறு கிடுகுகளையும்
நளினமாக பின்னிவைத்து விடுவாள்
ஏழு மணிக்குள்
ஏழு மணிக்கு விழிக்கும் ஆறு வயது
மகளுக்கு அடுக்குகள் அனைத்தும் செய்து
ஒன்பது மணிக்கு
உண்டு விட்டு நூறு தேங்காய்களை
கடப்பாரையில் உரித்து
கடகத்தில் வைத்து
தலையில் சுமந்து கொண்டு
சந்தையில் விற்று விடுவாள்.
பனிரெண்டு மணிக்கு வீடு வந்து
அடுத்த சமையல் செய்து பருத்திதுறையில்
படிக்கும் அண்ணனுக்கு மதிய ஆகாரம்
அனுப்புவாள் தட்டி வான் காரனிடம்
கொடுத்து
அத்தனை பனை மட்டைகளையும்
மருதாணி பூசாமலே கைகள் சிவக்க
வெட்டி ஒன்று
ஐம்பது சதத்துக்கு விற்றாள்.
விழுந்த பனம் பழங்களில்
அவள் தலையில் பயணம் செய்யாதவை
மிகச் சிலவே.
வெங்காய பாத்திகளில் வசிக்கும்
மண்புழுக்களை கொல்லாமலே கையால்
பொறுக்கி எடுப்பதில் அவளும் ஒரு ஹை டெக்
விவசாயி
தலையணை உறைகளில் அவள் கை
மயில் பூ போடாமல் அவளுக்கு
தூக்கம் வராது
கால் ஓயாமல் தையல்
இயந்திரத்தில் அவள் உறங்கிப்
போன நாட்களும் உண்டு
பனங் குருத்தில் அவள் செய்த
பாய்களும் ஏழு அடுக்கு பெட்டிகளும்
ஊர் பிரசித்தம்,
ஆனால் உறங்காதது
அவள் கண்கள் தான்
வயல் வரப்புகளில் எல்லாம்
அவள் வலம் வராத இடமே இல்லை.
வயல் விதைப்பது முதல் அறுவடை
அவளும் ஒரு வேலையாள்
சமையல் முதல் சகலமும் அவள் தான்.
இதில் தவணை முறையில் வரும்
தந்தைக்கு ஊறுகாய் முதல்
உப்பு மிளகாய் வரை எல்லாம்
போத்தல்களில்
ஊரில் ஒரு சின்ன மகராணியாம்
அவள் பிறக்கையில்
மணம் முடித்ததும் ஒரு
படித்தவனை தான்
ஆனால் அவள் கண்டதெல்லாம்
தன்னை உருக்கி உருக்கி ஒளி தரும்
மெழுகு வர்த்தி வாழ்க்கைதான்
அவள் உருக்கியவற்றைகளை
சொல்ல என் வாழ் நாள் போதாது
அவள் வடித்த கண்ணீரின்
முன் கடல் நீர் கூட நாணி
கொள்ளும்
ஆனால் அவள் தான்
என் தாய்.
அவள் சிந்திய குருதி
துளிகள் தான் என் எதிர்காலத்தை
இன்னும் வாழ வைக்கிறது
அதனால் அவள் முன்
கடவுள் கூட தலை கவிழ்ந்து
வணங்க வேண்டும் என்பேன் நான்

தனிமை


யாரும் இல்லாத ஊர் உலகம்
உறங்கிய பொழுதில் நீ
விழித்திருந்தால் தனிமை
என்று யார் சொன்னது
ஆயிரம் பேர் நடுவில் கூட
தனித்து நிற்கிறேன்
சுற்றி நடக்கும் காட்சிக்கு
நான் சாட்சியில்லை என்பது போல்...
வானத்திலிருந்து அசுர வேகத்தில்
நீர் ஊற்று பாறையில் விழுந்தும் இறக்காத
மழைத்துளி
இலக்கற்று பாலைவனத்தில்
விழுந்ததால் மடிவது போல
சூனிய சிறைக்குள் சிக்கி
சின்னா பின்னாமடைகிறேன்
காரணம் ஏமாற்ற வேலிக்குள்
என்னையும் என் சிந்தனையையும்
சிறைப்படுத்தி விட்டு
என்னவன் என நான் எண்ணியிருந்தவன்
தன்னவள் என இன்னொருத்தியை
இனம் காட்டியதால்…..
தினம் தினம் ஏற்றப்படும்
சிக்கன சில்லறை சிலுவைகளும்
அதில் வடியும் கண்ணீர் குருதியும்
ஆழ்கடல் மீனின் அழுகை போல்
வலிந்திழுத்த சிரிப்புக்குள்
அடக்கப்பட்டு வெளி வராத ரகசியமாயின,
குருட்டு விழிகளின் கனாக்களும்
இழந்த செவிப்புலனின் இசையும்
நீ என்ற பொய்மைக்கும்
நான் என்ற வெறுமைக்கும்
மத்தியில்
எங்கோ ஒரு கை காட்டி தெருவில்
அசாத்தியமான இனிமையில்…

தேடல்



















பூச்சியரித்த பூக்களிலும்
வாசனை உண்டு
புழுதிப் புயல் வீசும் பாலைவனங்களிலும்
மழை உண்டு
இரைந்து போகும் புகை வண்டி பயணத்திலும்
ரிதம் மாறாத இசை உண்டு
இப்படி எதிலும் இனிமையான தருணங்கள்
தேடும் சிலரும் உண்டு
ஆனால் இப்படியான தேடல்கள்
தீர்ந்ததால்
தேவதைகளை கனவில் தேடி
அதிசயங்களுக்காய்
அந்தி மழை மின்னலை கூட
ஆவலாய் பார்க்கிறேன்…

செல்லரித்த சிலுவை





உன்னை தேடிய என் பயணங்கள்
வினாக்களுக்கும் கனாக்களுக்கும் இடையில்
சிக்கி கொண்டு சிதிலமடைகின்றன.
நதிகளை கரைகளும்
நிலா அசைவுகளை முகில்களும்
தேடுவதில்லை.
ஏகாந்தம் தூண்டிய ஏக்கங்களில்
ஏதோ ஒரு புள்ளியில் உன் நினைவு மட்டும்
உன்னை தேட சொல்லி என்னிடம் ஆர்ப்பரிக்கின்றது
பன்னீர் மழை சொரியும் மேகங்களும்
புன்னகை புரியும் மழலை முத்தங்களும்
என் செங்குருதி சிறு துணிக்கைகளும்
கடைவிழியில் துருத்தி கொண்டிருக்கும்
கடைசி கண்ணீர் துளியும்
உன் வரவுக்காக மட்டும் என் வாழ்வில் காத்திருக்கிறது
ஆனால்
நீ வர மாட்டாய் என்னும் உண்மையும்
நான் உன்னை தேட முடியாது என்னும் பொய்மையும்
ஆகுதியில் கரைந்த உன் ஆதரவு கரங்களுக்காய்
அழுகின்ற என் ஆழ் மனமும்
இனம் தெரியாமல் என்னையும்
செல்லரித்த அதே பழைய சிலுவையில் ஏற்றுகின்றது.

நேற்றைய விதவை

















கல்யாண சந்தையில்
பெயர் மட்டும் தெரிந்தவனின் இடப்புறம் அமர்ந்து
தந்தையின் கடைசி நிலம் மட்டும் அடகு வைத்து
பொற் கொல்லன் செய்த தாலியை
நாணப் போர்வைக்குள் ஏற்றுக் கொண்டு
உணர்வுகளால் எழுத வேண்டிய காதலை
உருவத்தில் மட்டும் ஆண்மகனாக நின்றவனின்
பேடித்தனத்துக்கு காதலியாகி
நான்கு நாட்கள் வாழ்ந்து ஐந்தாம் நாள் விதவையாகி
வாழ்வின் சகல அத்தியாயங்களையும்
வாழ்ந்து விட்டவளாகி
ராசியில்லாதவளாகி
வெள்ளை உடை கொள்ளாத அமங்கலியாகி
எல்லாம் ஆகி முடிந்து விட்டன
ஆனால்
நியாயமான ஆசைகள் கூட
அடக்கப்பட வேண்டிய கட்டாய கதவுக்குள்
அதீதமான ஆசைகள் ஆர்ப்பரிக்கும்
அநியாய கனாக்கள் காண்கிறேன்
அந்தியில் வரும் கற்பனை காதலனுக்காக
செந்திலகம் சூடி நிற்கிறேன்
துள்ளி விளையாடுவாள் சின்ன மகள்
என்ற குருட்டு நம்பிக்கையில்
கரடி பொம்மை வாங்கி சேர்க்கிறேன்
பனியிருளில் மழையிரவில்
சாசுவதமான தனிமையில்
அசாத்தியமான அமைதியில்
உரத்து சிரிக்கின்றேன்
இலையுதிர்கால தெருக்களின் சருகுகள் போல
வரட்சியாக
வாழ்விழந்தவள் நான் என்ற வினோதம் கண்டு
.