18 December 2011

உன்னுடன் ஒரு இரவு


மின்மினி வீட்டுக்குள்
உன்னுடன் ஒரு இரவு

நாணம் ஆடை நெய்ய
காதல் காமம் கொள்ள‌
மின்மினி வீட்டுக்குள்
உன்னுடன்ஒரு இரவு

தீயில் தீயா மோகங்கள்
நீரில் நீறா தாகங்கள்
அகத்திணையில் மருகி
கலிதொகையில் பெருகி
கைக்கிளையாய் கலந்து
மின்மினி வீட்டுக்குள்
உன்னுடன் ஒரு இரவு

கரும்பச்சை பட்டு
கடல் ஆழ விழிகள்
குளிர்ந்த கூந்தல்
அலர்ந்த உதடு
மின்மினி வீட்டுக்குள்
உன்னுடன் ஓரு இரவு

கடலலை மனை நிலம் மறந்து
விழி முதல் உயிர் வரை கலந்து
அகம் முதல் புறம் வரை மறந்து
மின்மினி வீட்டுக்குள்
உன்னுடன் ஒரு இரவு

தங்க நிலவொளிக்க‌
கங்குல் கதவடைக்க‌
பின்னும் தீராமல்
உறக்கம் மறந்து
கலக்கம் களைந்து
கன்னி எழுதிய காதல் காவியமாய்
மின்மினி வீட்டுக்குள்
உன்னுடன் ஒரு இரவு

++++++++++++++++

11 November 2011

தொடுவானம்


எடுத்து வைத்த முதல் அடி...
வலிக்க வைத்த முதல் ஊசி...
அணைத்து தந்த முதல் முத்தம்...
ஆறு வயதில் நான் கண்ட முழு நிலா...
எடுத்து வளர்த்த பட்டு பூச்சி...
ஆயிரம் தரம் குட்டு பட்டும்
கைக்குள் வராத‌ 'இ'...
அலுக்காமல் கேள்விகள்
சலிக்காமல் நீ சொல்லும் பதில்கள்...
இளம் காலையில் துயில் கலைத்து
நீ ரசிக்க நான் சிணுங்க பார்த்த
சூரியன் திருடிய பனித்துளி
வானம் எட்ட எட்ட பறந்த
முதல் கடற்கரை பட்டம்...
நீர் துளைந்து நான் கொண்ட காய்ச்சல்
விழி நனைய உடன் நின்ற நீ...


பத்து வயது நான் நிரம்பு முன்
தெவிட்ட தெவிட்ட நீ தந்த அத்தனை
நினைவுகளும் இன்னும் கலையாமல்
மனப் படமாய் எனக்குள்..

இருளில் நான் மருள
ஒளியாய் நீ நிற்பாய்
இன்றும் இருளில் மருள்கிறேன்.............

நினைவுகள் சுமந்து
நிஜத்தை தொலைத்து
வருடங்கள் கழிந்தும்
வலி மட்டும் கழியாமல்
கரை அறியா தரையில் நானும்
ஒரு ஆயுள் தொலைவில் நீயும்
தொடுவானமாய்!

To my younger brother, who is an eternity away from me.

03 October 2011

தண்டனை


இச்சைகள் அடக்கியறியா உடல்
வக்கிரங்கள் வார்த்தெடுத்த மதி
உடலுக்கும் மதிக்கும் உவப்பளிக்க
தற்காலிகமாய் ஒளிந்து கொண்ட மனசாட்சி
ஈசன் மறைந்து நீசன் தோன்ற
இத்தனை போதாதா???

கண்ணை கட்டி ஆடிய வெறியாட்டம்
பல வாளி தண்ணீர் துளிகளால்
உடல் கழுவிய பின்னும்

வேதனைகளை வில்லாக்கி
வினாக்களில் நாணேற்றி ஏவிய
ஒரு காய்ந்த கண்ணீர் துளி அம்பு
உருகி உருளும் அருவமான
மெழுகு துளிகளாகி உஷ்ணம் மாறாமல்
உடல் வருத்தியது...

நீயல்ல‌ என சாட்சியங்களும்
சந்தர்ப்பம் என சட்டமும்
பொய்யை மெய்யாய்
சான்றழிக்க
அசரீரியாய் ஒலித்த உண்மை மட்டும்
மனதை சல்லடைகளாக்கி
மனிதத்தை உலுக்கியது...
செங்குருதி வற்றி
அமிலத்தில் இதயம் துடிப்பது போல்
நெஞ்செரித்தது..
அஃறிணை உதாரணம் நீ என
கண்ணாடியில் தோன்றி விம்பமே
காறி உமிழ்ந்தது..

ஆசை கோபம் ஓய்ந்து
உறங்கும் மனிதம் விழிக்கையில்
சில தவறுகளின் தண்டனைகள்
இரு முனை கூர் கொண்ட ஆயுதத்தால்
ஒரே தடவையில் வருத்துவது போல
பலர் அறியாதது
ஆனால் வலி மிகுந்தது.


+++++++++++++++++

09 September 2011

அன்னையும் அவளும்

பள்ளி பருவத்திலிருந்தே
செலவு செய்தால் குறைந்து விடுமோ என்று
எந்த பெண்ணிடமும் சொல்லாமல்
சேமித்த காதலை
சின்ன சிரிப்பாலும் கடைக்கண் பார்வையாலும்
மொத்தமாய் திருடி கொண்டு காதலியானாள்..

அதிகம் பேசாதவள்
நிறுத்தாமள் பேசினாள்..
நான்கே எழுத்துகள் கொண்ட என் பெயருக்குள்
நாற்பது செல்ல சுருக்கங்கள்
அவள் செய்தாள்..

ஒரு நாள் அலை கரையில்
மணல் விளையாடியபடி கேட்டாள்
"ஒரு நாளில் எத்தனை தடவை என்னை நினைப்பீர்கள்?"
"உன்னை மறந்தால் தானே நினைப்பதற்கு"
என்றேன் தொன்று தொட்டு வந்த காதலன்களை போல‌

அடுத்து கேட்டாள்
"உங்களுக்கு உங்க அம்மாவையா என்னையா அதிகம் பிடிக்கும்?"
என்று
அவளை தான் பிடிக்கும் என்று நான் சொல்வதை
எதிர்பார்த்திருப்பாள்
ஆனாலும்
"என் தாயை என்றேன்"
சின்னதாய் ஒரு சிணுக்கத்துடன்
"நான் தான் உஙகள் உலகம் என்றீர்களே?? எல்லாம் பொய்யா?? "
என்றாள்
"காதலியே... நீ என்னை காதலிக்க தகுதிகள் எனக்குண்டு
இல்லாவிடில் காதலிப்பாயா??
ஆனால்
என் முகம் அறியும் முன்னிருந்தே என்னை நேசிப்பவள் அவள்
ஆதலினாள் அவள் உன்னை விட ஒரு படி மேல் தான்"
என்றேன்

03 January 2011

கடைசி கனவு


வாழ்வுக்கும் சாவுக்கும்
இடையில் இருந்த
கடைசி நிமிட துளிகளில்
செத்துகிடந்த ஆயிரம் கனவுகள்
ஆவிகளாய் ஆதங்கங்களாய் மருட்டின
செத்து கொண்டிருந்த கடைசி கனவு ஒன்று
உயிர் வலிக்க என்னை
உற்று பார்த்தது
பெற்று போட்டு விட்டு பேண மறுத்த தாயை பார்ப்பது போல்…

ஏகாந்தத்துக்குள் ஆயிரம் கேள்விகள் அது கேட்க
சந்தர்ப்பங்களை சாடினேன்
சூழ்நிலைகளென சூழுரைத்தேன்
கூசாமல் பொய்யுரைத்தேன்
மானுடத்தையும் மல்லுக்கிழுத்தேன்

ஏளனச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு
மறைந்து போனது என் கடைசி கனவும்!!
கோழையாய் நானும் செத்து போவேனோ??


+++++++++++++++++++++++

கலைந்த கனவுகள்


சிற்பமாகையில் சிதைக்கும் சுத்தியல்களாய்
சித்திரமாகையில் வெட்டியெறியும் கத்திரிகளாய்
பறவையாகையில் பாய்ந்திழுக்கும் ஓநாய்களாய்
மலராகையில் கடித்து குதறும் மந்தைகளாய்
சில வக்கிர மானுடங்கள்…

போராடினோம்… மன்றாடினோம்…
வக்கிரங்கள் வஞ்சித்தன
உக்கிரங்கள் உயிர்த்தெழுந்தன
கெக்கலித்தன கிலியூட்டின

போராட்டம் இழந்து
மண்ணில் சரிந்து
சாம்பலில் கலந்தோம்..
வக்கிரங்கள் கும்மாளமிட்டன
குதித்தாடின!!

செதுக்கிய உளியும்
தீட்டிய தூரிகையும்
பறக்க வைத்த சிறகுகளும்
மொட்டவிழ்த்த தென்றலும்
அழுது கொண்டிருந்தன
கலைந்த கனவுகளுக்காய்!!

உலகம் உறங்கையில் உறங்காத வஞ்சம்
நம் கல்லறைத் தோட்டங்களுக்கு காவலாய்!