
சலித்து சலித்து தேடினாள்
அவள் நினைவு சூழலில்
சொந்தம் எனும் சங்கேத வார்த்தைக்காய்…
ஆனால் அவள் நினைவின் தொடக்கம்
எழுத்தறியாத ஒரு பேருந்து சந்திப்பில்
எச்சை அறிந்த பிச்சை கொண்ட ஆரம்பமாகவே
இன்று வரை….
உயிர் வலிகள் குலவும் பொழுதுகளில்
தரை வீழ்ந்த நிலவாக அவள் தனிமை…
வழியறியாத ஊரில் மொழியிழந்த அவள் வெறுமை...
மூங்கில்கள் இழந்த கீதங்களாய்
ஊமையான அவள் இரவுகள்…
காந்தங்கள் இழந்த கவர்ச்சியாய்
பற்றற்ற அவள் கனவுகள்…
மழையிரவில் தாயின் தழுவல்களின்
அடையாளங்கள் அனுமானங்களில் கூட இல்லை.
காய்ந்த இலைகளில் பந்தங்களின் தேய்ந்த சுவடுகள் இல்லை…
கார்கால குதூகல பசுமைகள் இல்லை
பசி அறிந்தவள், ருசி அறியவில்லை
வார்த்தைகள் அறிந்தவள், வார்த்தையாடல் அறியவில்லை
உடல் அறிந்தவள், வயது அறியவில்லை
பெண்மை அறிந்தவள், மென்மை அறியவில்லை..
புலம் பெயர்வோ புயல் மழையோ
புது வித சதி விதியோ
ஆரம்பமும் முடிவும் தெரியாத ஆலகால இருட்டில்
நிராகரிக்கப்பட்ட நிஜங்களை அறியாமல்
தனக்கு தானே யாரோவாகி போனாள்...