24 February 2010

காணாமல்..


மாலை நேர வானம்
சில துண்டு மேகங்கள்
ஒற்றையாய் நான்
காட்சி துறந்து இமை கவிழ்த்து…..
காதலுடன் காத்திருப்பு…
வருகிறாய்…
தகவல் சுமந்தது மல்லிகைச் சுகந்தம்…
விழி விரிப்பதற்குள்
உடல் முதல் உள்ளம் வரை
சில்லிட தழுவினாய்…
தினமும் தீண்டியும்
முதல் தீண்டல் போல உருகி நின்றேன்…
உச்சி கூந்தல் சுருளை கலைத்து
ரசித்தாயோ???
ஒதுக்க முயல சிரித்தாய்
மீண்டும் மீண்டும் இப்படி ஒரு வம்புனக்கு…
செல்ல கோபம் நான் கொண்டேன்
என் கோப சுவர்களை தகர்க்க
மேலாடையில் உன் கவனம் செல்ல
சினம் தகர்ந்து
பெண்மையின் நாண சுவர் நான் எழுப்பினேன்
கையது கொண்டு மெய்யது மூடி…
நின் ரகசிய சிரிப்பு என் செவிகளுக்குள்…
சிந்தை மயங்க விழி திறந்தேன்…
விழிகளுக்குள் சிறைப்படுத்த முடியவில்லை
விளங்காத ஒரு வருடலுடன்
விலகிப் போனாய் தென்றல் காற்றே…

21 February 2010

கண்ணின் மணி போன்றவளே…


முந்நூறும் கடந்து
மூன்றாவது நாளில்
என் தாய்மை சிப்பிக்குள்ளிருந்து
தரை தீண்டிய வெண்முத்து நித்திலமே..
என் மழலை சித்திரமே..
நீ சிரிக்கையிலே
என் நெஞ்சம் இலவம் பஞ்சாகுதடி
நீ விழி விரிக்கையிலே
என் உலகம் மேலும் அழகாகுதடி
நீ தேவதை கனவு காண்கிறாய்
என் சிறகுகள் விரியுதடி
நீ கையணைப்புக்கு தத்தி வருகிறாய்
என் உள்ளம் பாகாகுதடி
நீ மெல்ல அடி வைத்து பழகுகிறாய்
என் கண்மணி கூட உனை காக்குதடி
நீ முத்தமிடுகிறாய்
என் முத்தாரம் கூட விகசிக்குதடி
நீ மழலையிலே மிழற்றுகிறாய்
என் தாய் மொழி அழகு மறக்குதடி
நீ பாடி ஆடுகிறாய்
என் பாதங்கள் காற்றில் மிதக்குதடி
நீ கண்ணயர்கிறாய்
என் கனவு உன் காவியம் பாடுதடி
நீ விழி நீர் சுரக்கின்றாய்
என் உயிருக்குள் வலிக்குதடி
நீ என் கைகளுக்குள் உறங்குகிறாய்
என் கைகள் தீண்டும் காற்றை கூட வடிகட்டுதடி
நீ அம்மா என்றழைக்கிறாய்
என் ஆன்மா சிலிர்க்குதடி
கடவுள் எனக்காக அனுப்பிய
காதல் பரிசு நீயடி…
என் கண்ணின் மணி போன்றவளே…

20 February 2010

அறியப்படாத ஒருத்தி


ஒரு நள்ளிரவு
மங்கிய சில தாரகைகள்
பாதியாய் உடைந்த வான் நிலா
பாதி ஒளியில் வரி வடிவமாய்...
ஏதோ ஒரு சொல்லப்படாத சோகத்தில்
அறியப்படாத ஒருத்தி

வெள்ளை மணல் வெளி
ஒற்றை தென்னை
தென்னங்கீற்றில் வீணை மேவிய தென்றல்
கற்றை குழலிலும் மேவி செல்ல
எழுந்து ஒதுக்க முயற்சிக்காத விரல்கள்...
ஏதோ ஒரு சொல்லப்படாத சோகத்தில்
அறியப்படாத ஒருத்தி

பளிங்கு களவாடியேனும்
களஞ்சிய படுத்த துடிக்கும் கருவிழிகள்
துடிப்புகள் தூரமாக தொலைந்த
இமை சாளரங்கள்
மாரித்தெரு மழை நீர் தேக்கங்கள்
திரை போட்ட விழிகள்
சரிவு கண்டு கன்னம் வழியே
வழிந்த உப்பு நீரோடை...
ஏதோ ஒரு சொல்லப்படாத சோகத்தில்
அறியப்படாத ஒருத்தி

செந்நிற மூக்குத்தி சுடர்
மூச்சு காற்றின் வெப்பம்
தாங்காது சிவந்த நாசி
பல் அழுந்தி ரத்தம் கசியும்
இதழ் அதரங்கள்
இச்சையின்றிய வெற்றிடமாய்...
ஏதோ ஒரு சொல்லப்படாத சோகத்தில்
அறியப்படாத ஒருத்தி

பொருள் பொதிந்த சொற்களால்
விளக்க
அவள் வாழ்வில் பொருளில்லையோ
மணிதுளிகள் பல மடிந்து
சில நிமிட துளிகளின் பின்
ஏகாந்த கன்னிச்சிலை
எழுந்தது...
நடந்தது...
கலந்தது...
பாரதியின் நல்லதோர் வீணை
போல்...

செய்தியாக கூட அறியப்படமாட்டாள்
என அவள் சுமந்து சென்ற
கல் சொன்னது கடலுக்கு...
ஏதோ ஒரு சொல்லப்படாத சோகத்தில்
அந்த அறியப்படாத ஒருத்தி

15 February 2010

வசப்படும்


பாழடைந்த என் இரவுகள்
பனி சால்வைகள் போர்த்தி கொள்ள
உதிரி பூக்களாய்
ஏகாந்த இமை மடி நீர் துளிகள்..
விழியில் உயிர் கொண்டு
இதழ்கடை வரை உயிர் வாழ்ந்து
தலையணை சரிவில் உயிரிழந்து கொண்டிருந்தன
காரிருளில் கண்ணீரின் கலகம்
மனதுக்குள் சங்கேத சலனம்
சாளர திரை நீக்கினேன்
பனி தரளங்கள் சுமந்த பசும் புற்சாலை
குழல் கலைக்கும் குளிர் தென்றல்
மல்லிகையின் மெல்லிய சுகந்தம்
ஏதோ ஒரு பெயர் தெரியாத பறவையின்
இதமான கீதம்
வான் எங்கும் சங்க தமிழ் மகளின்
மூக்குத்தி மாணிக்கங்களாய்
முளைத்த மின்மினி விண்மீன்கள்
விண் நிலா இல்லா அமாவாசையில்
விடியலில் கடை வரை விழா போல விழித்திருந்தேன்
தாய் மடியின் இதம் உணர்ந்தது போல்
ஒற்றை பனையடியில் ஒரு தூண்டா மணி சுடர்
விடிவெள்ளி…
விடியலின் அழகான ஆரம்பம்
மனதுக்குள்
விண்ணைதாண்டி வருவாயா விண்மீனே???
என்று வலி மறந்த ஒரு கிள்ளை குரல்….
நான்கு சுவருக்குள் மனதின் மையத்தில்
செங்கோல் கொண்ட வேதனைகள்
திறந்த வானின் கீழ் சிறகுகொண்ட
சருகுகளாயின
இயற்கை அழகானது மட்டுமல்ல
ஆத்மார்த்தமானதும் கூட
புற விழி மூடி அக விழி திறந்தால்
வானம் கூட வசப்படும்….
வாழ்வு மட்டும் வசப்படாதா?