29 November 2010

ஒருதலை வலி


என் கனவுகளுக்குள் நீ
என் கவிதைகளுக்குள் நீ

என் கண்ணிமைகளுக்குள் நீ
என் கண்ணீருக்குள் நீ

என் தனிமைகளுக்குள் நீ
என் தவிப்புகளுக்குள் நீ

என் கோபங்களுக்குள் நீ
என் புன்னகைகளுக்குள் நீ

கானலால் ஒரு சாரலாய் நீ
ஒருதலையாய் உறவிழந்த
உயிர் வலியாய் நான்!!!

சொற்களுக்கிடையில் மௌனமாயும்
மௌனங்களுக்குள் சொற்களாயும்
செல்லரிக்கிறது என் காதல்!!

நிறுத்தாமல் பேசும்
நீ பேசுவதை
நிறுத்தியதால்
மௌனத்தில் கூட
உளறுகிறேன்!!!

28 November 2010

தயக்கம்


சாத்தியங்கள் காறி உமிழ்ந்தன
சந்தர்ப்பங்கள் கதவடைத்தன
ஐந்தடிக்குள் அடங்கிய
எலும்பும் சதையும்
சொன்ன தீர்வு
கூசாமல் கூவி வில்
அழகான மேனியை…

அவள் தாழிட்ட கதவுக்குள்
யாரோ மனைவியரின் கனவுகள்
யாரோ மழலைகளின் புன்னகைகள்
யாரோ தாய்களின் நம்பிக்கைகள்
மரித்தன

சரியா தவறா போராட்டத்துக்குள் அவள்
தாழிட்ட கதவை மறுபடியும்
எவனோ தட்டுகிறான்
தயங்குகிறாள்..
ஆனாலும் திறக்கிறாள்!!!
அவளை தியாகி என்ன
சாதாரண மனுசியாக கூட
ஏற்க மனிதரில்லை
என்பது உண்மை தானே
அவளது அந்த சிறு தயக்கம்
அவள் வைக்க நினைத்த முற்று புள்ளி!!

27 November 2010

மாற்றங்கள்


நண்பன் அழ வைக்கிறான்
எதிரி எதுவும் பேசாமல் தாண்டி செல்கிறான்

உண்மைகள் ஒலியிழக்கிறது
பொய்கள் புரிந்துணர்வு கொண்டாடுகிறது

பகல்கள் பயமுறுத்துகிறது
இரவுகள் இயல்பாய் நிசப்தாமியிருக்கிறது

தெய்வம் சிலைகளாகவே சிந்திக்கிறது
மனிதன் சிந்திக்காமல் தெய்வமாகிறான்

நட்பு காதலாகிறது
காதல் மறுபடியும் நட்பாகிறது

இதயம் அங்கேயே இருக்கிறது
இணையம் காதல் பரிமாற்றம் செய்கிறது

இதிகாசங்கள் மறக்கப்படுகின்றன
இழி காவியங்கள் எழுதப்படுகின்றன

அழகிய தருணங்கள் தொலைகின்றன
தொலைபேசிகள் பேசிக்கொள்கின்றன

மரங்கள் தறிக்கப்படுகின்றன
விதைகள் மாற்றியமைக்கப்படுகின்றன

இயற்கையை சிதைக்கிறோம்
அதையே மீண்டும்
செயற்கையால் மீள் நிரப்புகிறோம்