26 March 2014

அவசரம்


காவிய காதல் கவிதைகளில் மரித்து போக,
கலியுக காதல் அன்றாட காட்சிகளில் சாட்சியாக,
விழி மடல்கள் நாண கதவடைப்பதில்லை...
இமைத்துடிப்பின் பிரிவில் உயிர் கனப்பதுமில்லை...
கைத்தொலைபேசி இரவில் தலையணைக்கடியில்
பகலில் குழியலறையில் மணிக்கணக்கில்
அவனது பெயர் தோழியின் பெயரானது..
சிரித்து கொள்வோம் சில சமயம்...
அடித்து கொள்வோம் பல சமயம்...
கை கோர்த்து சாலைகள் அளந்தோம்...
அன்றில் பறவையில் இரண்டானோம்...
இடையில் ஏதோ ஞானம் தோன்ற,
இது நம் பாதை இல்லை என்று
அவசரமாய் முடிவெடுத்தோம்...
மனமொன்றி
காதல் கதிரை மீண்டும்
கரும் இருட்டுக்குள் கட்டி கொண்டு
நட்பு பனிசால்வை போர்த்தி
கை குலுக்கி கொண்டோம்...
இருதிசை பறவைகள் என பறை சாற்றினோம்...
தண்டவாளம் எனவும் சொல்லி கொண்டோம்...
சமாந்தர கோடுகளில் எம் பயணம்..
இதுவரை எல்லாம் இயல்பாக இருக்க
நாட்கள் நகர்ந்தது...
தனிமை கனத்தது...
இலைகள் உதிரும் சாலையில்
சிரித்து பேசிய நீ இல்லை...
நான் விழி கனத்த தருணங்களில்
இதழ் மலர வைத்த நீ இல்லை...
பேருந்து பயணங்களில் தோள் சாய்த்து
கொள்ள நீ இல்லை...
சதா செல்ல சண்டை போட்டு
ஊடல் கொள்ள நீ இல்லை...
யாதுமாகி நின்ற நீ யாரோவாகினாய்..
ஏதுவாக இருந்த நான் ஏழையானேன்...
பிரிந்த பின் காதல் கொண்டேன்..
முற்று புள்ளியின் சில புள்ளிகள்
நான் வைத்து கொண்டேன்..
நீ முற்று புள்ளிக்கு பின் அடுத்த
காதல் கவியையே எழுதிக்கொண்டாய்.
உன் தாளில் எழுத்து பிழையாய் நான்...
என் தாளில் கவி வரியாய் நீ...

காதல் கடிதம் 2


என் அசட்டு காதலியே!!


உன் கடிதம் கண்டேன்...
காதல் கண்டேன்....
போதை கொண்ட வண்டானேன்
வேழம் கொன்ற வேந்தனானேன்
சோழம் கண்ட ராஜ ராஜனானேன்
கட்டியணைத்து கொள்ள
என் ஆண்மை துடித்தது...
தாண்டி சென்றேன் கலாச்சார சுழலில்
சிக்கிய காகிதமாய்...
ஆனால் உன் ஒவ்வொரு
வார்த்தையும் எனக்குள் ஓடி திரிகிறது
உதிரத்தில் கலந்து..
பேராசை வந்தது எனக்கு
இன்னொரு தடவை உன் அஞ்சல் காணும் ஆவலில்
இருபது தாள் கசக்கியெறிந்து
விட்டேன்,
என்னால் உனக்கு நிகராக ஒரு
சொல் கூட இயலவில்லை..
மறு படி எனக்கொரு கடிதம் எழுது காதலியே
உன் மக்கு காதலன் கற்று கொள்வேன்.

மனிதன்



தெப்பைகுள தாமரை அழகுணராது
வன்புணர்ந்த நுணலானான்
காமவெறி கொண்ட போது…

மின்சார கம்பிகளில் கூடு
கட்டி கொண்ட பறவையானான்
தன் மனை துறந்து பிறன் மனை புகுந்த போது…

விடம் கக்கும்
அரவமானானான்
நச்சு வார்த்தைகள் நா கொண்ட போது…

இடி மழை மின்னல்
உணராத எருமையானான்
சுய கௌரவ சங்கிலிகள் அறுத்த சேவகனான போது…

விளக்கினை நாடும்
விட்டிலானான்
வேசி வீட்டில் வாசம் கொண்ட போது…

கட்டுங்கடாத
காளையானான்
சுயம் சொல்லும் பயம் மறந்த போது…

ஒரிரு தருணங்களில்
ஆறறிவு கொண்ட
மனிதனுமானான்
வலி உணர்ந்த போது….

சலிக்காதவரை முத்து
தெரிவதில்லை
வலிக்காதவரை வாழ்வு
தெரிவதில்லை

14 March 2014

அனுபவம்

ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும்
கொன்று உரமாக்கி
கொப்பும் கிளைகளுமாக
இதயத்தின் இடுக்குகள் எங்கும்
நிரம்பி நின்றன வலி மரங்கள்….

இளமையின் ஆரம்ப நாட்கள்
ஒவ்வொன்றுமே வெற்று காகிதங்களாக...
எழுதிய ஒவ்வொரு வரிகளும்
இலக்கணம் சரி பார்க்கப்படாத காவியமாக…

ஆனால் அனுபவம்
ஒரு ஆரவாரமான ஆசான்…
காவியங்களை சூனியமாக்கினான்...
ஆறாத சில வலிகளால் மனதை சுற்றி வேலியிட்டான்…
போதாதென்று
பயங்களால் தாளிட்டான்..

இன்று சிறக்க துடிக்கும் சின்ன பறவையில்
வண்ணச் சிறகுகளாய் விரிந்த கனவுகளும்...
உந்தி எழுந்த போதெல்லாம்
விலங்குகளாய் கால்களுக்குள்
கனத்த தளைகளும்...
சூழ்ந்த ஏகாந்தத்துள்
விடை தேட விளங்கா விடுகதையாய்
ஒரு வாழ்க்கை....