29 June 2010

பறப்பதற்கு சிறகில்லை


காதல் கடிதங்கள்
அழகானவை….
யதார்த்தம் மீறியவை….
“பகலதிலும் பௌர்ணமி குளிர்மை உன்னால்”
“கொன்றாலும் சாகாது என் காதல்”
“உன்னை பிரிந்தால் இயங்காது என் உலகம்”
இவையெல்லாம் கடிதங்கள்
நிரப்பிய காதல் அறிக்கைகள்…
ஆனால்
குடையிருந்தும் மழையில்லை என்பது போல்
நிஜமாக திரிக்கப்படும் பொய்கள்…
அறிந்து கொண்டேன்…
வெள்ளொளியில் நிறப்பிரிக்கையில்
தோன்றும் ஏழு வண்ணங்கள் போல
மனிதர்கள் நிறம் பிரிகையில்தான்
அறிந்துகொண்டேன்….

உணர்வுகள் உயிர் வலி கொள்கையில்
கண்கள் பேசும்
தண்ணீர் மொழியான கண்ணீர்
ஆரம்பத்தில் தலையணை தோய்ந்து
பின் விசும்பல்களாகி
இப்போதெல்லாம் மௌனங்களாக மட்டுமே….
இரவில் உடல் கொண்டு உருவாடும் துன்பங்கள்
விடியலின் வெளிச்சத்தில்
தற்காலிக தலை மறைவு...
ஆனாலும் ஆழ் மனதின்
முணுமுணுப்புளிற்கு ஓய்வில்லை...

உறக்கம் மறந்த என் இரவுகள்…
இதயம் கசியும் வெறுமைகள்…
வெண் தாளில் வரைந்த சித்திரங்கள் எல்லாம்
வெறும் கோடுகள் மட்டுமே என்றான
தோல்விகள்…
நட்சத்திர பருக்கைகள் மட்டுமே இரவுணவாகி
கனவிழந்த விழிகள்…
வீடு மறந்த
முகவரி இழந்த மேக கோலங்களை
அண்ணாந்து பார்க்கையில் ஆட்கொள்ளும்
அமானுசிய அமைதி..
வனாந்தரத்தில் உலவும் நிலவு
ஆழ்கடலில் பொழியும் மழை
போல்
உறவற்ற ஓர் தனிமை…
இவையெல்லாம் சுய தண்டனைகளா???
அல்லது
சுயம் வெறுத்தபின் தோன்றும்
ஆழ்ந்த அமைதிக்கான தேடலா???

காதலியானவள் மனைவியானதும்
காதல் இனித்தது
மனைவியானவள் மலடியானதும்
மடிந்தது காதலா?? மனிதமா??
பாலைவனங்களில் தாகம் மிகுகையில்
ஒட்டகவதை உயிர் கொலை அல்ல
அது பாலைவன நியாயமாம்…
ஆனால்
இடமும் காலமும் மட்டுமே
நியாய அநியாயங்களை நிர்ணயிக்கும்
அதிகாரத்தை அளித்தது யார்??
மழை துளிகளை ஏற்கையில்
இடி முழக்கங்களை ஏற்க மறுப்பது
எந்த வகை நியாயம்??
இயற்கை வஞ்சித்த தாய்மை நிராகரிப்பு
தனி ஒருத்தியின் திட்டமிட்ட
சதியாக சித்தரிக்கப்பட்டது
என்ன நியாயம்???
வாழ்க்கை கற்று தர முயற்சிப்பது
ஏமாற்றங்களையும் தோல்விகளையும்
எப்படி பழக்க்கப்படுத்தி கொள்வதுதான்
ஆனாலும்
பழக்கப்படாமல்
இன்றும் பறக்கத்தான் துடிக்கிறேன்
சிறகில்லை…..

2 comments:

  1. // வனாந்தரத்தில் உலவும் நிலவு
    ஆழ்கடலில் பொழியும் மழை
    போல்
    உறவற்ற ஓர் தனிமை… //
    ஊடுருவிச் செல்லும் வரிகள். . .

    ReplyDelete
  2. மிகவும் அருமையாக இருந்தது, பறப்பதற்கு சிறகில்லை உண்மையில் மிக அருமையாக இருந்தது.


    மேலும் உங்களுடைய ஜாதகம், திருமண பொருத்தம், எண் கணிதம் மற்றும் எதிர்காலம் பற்றி
    அறிந்து கொள்ள www.yourastrology.co.in
    என்ற இணையதளத்தை பாருங்கள் மிகவும் பயனாக இருக்கும்.

    ReplyDelete