12 July 2010

அவன்


பூக்களை போல
மென்மையானவன் அவன்…
மண் கீழ் வேரை போல
உறுதியானவன் அவன்…
சின்ன புயலை போல
செல்ல சண்டை செய்பவன் அவன்…
சின்ன சின்ன ஊடல்களுக்கு கூட
என்னை ஏங்க வைப்பவன் அவன்…
என் எண்ணங்களுக்கு முகவரி
அறிந்தவன் அவன்…
தாயின் தழுவல்களை போல கதகதப்பானவன் அவன்…
தந்தையை போல் அடம் பிடிக்கையிலும்
அடக்காது ரசிப்பவன் அவன்
ஆனாலும் கண்டிப்பானவன் அவன்…
பெண்மையின் மென்மை
உணர்ந்தவன் அவன்…
என் தனிமைக்கு நட்பு பூண்டவன் அவன்…
தன் ரகசியம் அனைத்தும்
எனக்கு மட்டும் சொல்பவன் அவன்…
அழகிழந்த தருணங்களிலும்
அழகி என்பவன் அவன்…
காதோர நரையின் பின்னும்
காதல் நரைக்காதவன் அவன்…
என் செல்ல விவாதங்களை
சலிக்காமல் எதிர்ப்பவன் அவன்…
என் சின்னச் சின்ன கனவுகளை கூட
செயலாக்குபவன் அவன்…
என் கண்ணீர் என் புன்னகை எல்லாவற்றிலும்
உடனிருப்பவன் அவன்…
உறக்கத்திலும் என்னை
மறக்காதவன் அவன்…
கடுஞ்சொல் அறியாதவன் அவன்…
மழை கண்ட நிலம் போல்
இணக்கமானவன் அவன்…
என் உடல் சுமக்கும்
இன்னுமொரு உயிரானவன் அவன்..
எனக்கு மட்டும் அழகானவன் அவன்…
எனக்காக மட்டும் முழுமையானவன் அவன்…
எனக்கு மட்டும் காதல் சொல்ல வந்தவன் அவன்…
அவன் தான் என்னை எனக்கு
மறுபடியும் அறிமுகப்படுத்திய இனியவன்…

++++++

கல்கியின் சிவகாமியின் சபதம்


பல்லவன் சிற்பியின்
ஏழைமகள்…
கிளியினதும் மானினதும்
தோழி…
நடம் ஆடுகையில்
அண்ட சராசரங்களையும்
கையில் அடங்க வைக்கும் கலையரசி….
காதல் கொண்டாள்…
காஞ்சியின் பல்லவகுமாரன் மேல்…
அவன் உள்ளம் கவர்ந்தாள் அறிந்தே…
நீசன் ஒருவனின்
நெஞ்சமும் கவர்ந்தாள் அறியாமலே…
மண்ணாசை பெண்ணாசை
தலைவிரிக்கையில்
யுத்தங்கள் மட்டுமே தீர்வாயிருந்த
காலத்தில் அல்லவா அந்த காதல் மலர்ந்தது…
நீசனின் காதல் பெண்ணில் …
நீசனின் சோதரனின் காதல் மண்ணில்…
காஞ்சியை சூழ்ந்தது நீசன் படை…
காதலன் காத்திருக்க சொன்ன இடம்
நாடி சென்றாள் காஞ்சியை துறந்து
கன்னி…
விதி சிரித்தது…
வஞ்சகன்
வஞ்சியை மட்டும் சூறையாடி
காஞ்சியை தோற்றான் …

தேவலோகம் கூட காணாத
தெய்வீக நடனத்தை
எதிரியின் நாட்டு தெருக்களில்
ஆடவைத்தது விதி…
ஏந்திழை வெஞ்சினம் கொண்டாள்…
கள்ளமாய் கவர்ந்து செல்ல வந்த
காதலனிடம் சபதம் செய்தாள்..
ஏழை மகள் தன் நாடு வர
எதிரி நாடு செங்குருதியில்
ஆறோட வேண்டும் என்றாள்…
அவள் ஆடிய
வீதிகள் கொண்ட வீடுகள்
தீ கொள்ள வேண்டும் என்றாள்…
மான்விழிகளால் காதல் சொன்னவள்
விழி அம்புகளால் துவேசம் தீர்க்க கேட்டாள்…
செங்கனிகள் குழைந்த இதழ்களால்
காதல் சொன்னவள்
இன்று காதல் வேண்டாம்
பழி தான் வேண்டும் என்றாள்…
பிரிவு வருமே என்று போர் மீது
பொய்க்கோபம் கொள்பவள்
இன்று பிரிவு வேண்டும் என்றாள்
போர் வேண்டும் என்றாள்…
காதலன் வெகுண்டான்…
“ஏழை மகள் சபதம் தானே
விட்டு செல்லும்” என்றாள் விழி நீர் சொரிந்து…
அவள் சபதம் தன் சபதம் என ஏற்றான்…
ஆனாலும் அவளை உடன்
வர கேட்டான்…
மறுத்தாள் வஞ்சி...

காதலி சபதம் ஏற்றவன்
ஒன்பது ஆண்டு தவம் போல்
ஒரு படை கொண்டான்…
பெண்ணை சிறைப்பிடித்த
பேடியின் படை வென்றான்…
சிறை மீட்டான் காவிய நடன பொன்மகளை…

வெற்றிவாகை கொண்ட சக்கரவர்த்தி
நகர்வலம்..
மன்னனருகில் ஓர் அழகிய மனையாளை
உப்பரிகையில் நின்ற நடமகள் கண்டாள்…
காதலியின் சபதம் ஏற்றவன்
தந்தை வரமும் ஏற்று
பாண்டியன் மகளை மணம் கொண்டான்
என்பதை அன்றே உணர்ந்தாள்…

இருதயத்தில் ஏதோ ஒரு நரம்பு அறுந்தது…
ஆயிரம் சிலைகளுக்கு
மாதிரி அபிநயம் செய்தவள்
சோக சிலையானாள் சில கணங்கள்…
பின் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது போல்
அவள் நீழ் விழிகளில் நீர் பொங்கியது..
பிரவாகித்தது...
பின் அறிந்தறியா சாந்தி குடிகொண்டது
அவள் மதி முகத்தில்...

அந்த சிலை மகள்
தில்லையாடிய சிவனின்
காலடி தீண்டிய தாலியை
தன் கரங்களாலே பூண்டாள்…
பரவசமாய் நடம் ஆடினாள்…
அந்த அற்புத கலையரசி
சிவகாமி…
சிவனையன்றி
எவனை அடைவாள்..???

10 July 2010

மௌனமான கவிதை


இதய கிடங்கில்
எங்கோ ஒரு மூலையில்
என்றோ புதைந்து போன அவள்
முகம்
தூசு படிந்த சித்திரத்தை
துடைக்கையில் தெரிவது போல்
என் எதிரில்….
ஆழ்ந்த கண்களிற்குள் தேடல்…
அதே அவள் தான்…

சிந்தனையின் எல்லை வரை சென்றும்
அவள் அறியாள் தாய் மடி…
”உறவுகள்”
அகராதியில் கண்டு அவள் அறிந்த
ஒரு வார்த்தை…
நட்சத்திரங்கள் இழந்த வெற்று வானில்
ஒற்றை நிலா போல
அழகான ஆனால் வலி மிகுந்த உவமை அவள்…
வானோடு வாழ்ந்து
தடுக்கி தரையில் விழுந்த தேவதை அவள்…
அனாதை…

போராட்டக்களங்கள் வீரர்களுக்கு
போராட்டம் மட்டுமே களங்கள் அவள் போன்றோருக்கு…
வீரன் தோற்றாலும் போராட்டங்கள் பேசப்படும்
அவள் தோற்றால் பேசவோ யாரும் இல்லை..
பேசப்படவோ எதுவும் இல்லை….
ஆனாலும் அவள் போராட்டம் நான் அறிவேன்
ஒரு ஊமை தோழியாய்..

ஊமை இரவுகளிலிருந்து
ஏக்கங்களை மீட்டெடுத்தாள்…
அர்த்தங்களுக்கு வாழ்வெழுதாமல்
வாழ்வுக்கு அர்த்தமெழுதினாள்..
தோல்விகளை தூர நிற்கும் வெற்றி என்றாள்…
வெற்றிகளை தோல்வி தோற்கடித்த மாயை என்றாள்..
அவளிடம் மண் நோக்கும் நாண பொய்கள் இல்லை…
பெண் என்ற பேதமை தழைகள் இல்லை…
அவள் ஊரறிய சாதித்தது எதுவும் இல்லை…
ஆனால் இருபதாவது வயதில்
இரு ஏழு வயது சிறுமிகளின் அன்னை…
தனித்து இயங்கும் சூரியன் அவள்…

கடல் கொந்தளித்தாலே
கவிதை கிறுக்கும் என்
ஒரே மௌனக்கவிதை அவள்…

07 July 2010

சந்தித்தோம்


அதே நானும் அதே நீயும்
இன்னும் ஒரு தடவை

அதே பேருந்து பயணத்தில்…
அதே எதிர் இருக்கைகளில்…
அதே மௌனத்தில் நான்…
அதே விளங்காத வேதனையில் நீ….
நம் கடைசி சந்திப்பை போல….

ஆனாலும் ஒரு வித்தியாசம்…
இன்று
என்னருகில் என் கணவன்…
உன்னருகில் உன் மனைவி….
முள்வேலியாய் நம் காதல்...

காத்திருக்கிறேன்உன் இமைகள் கவிழ்கையில்
உன் இதழ்கள் மலர்கையில்
உன் கன்னம் குழைகையில்
உன் வார்த்தைகள் முற்று காணாது மௌனிக்கையில்
உன் பார்வை தழைய மறுக்கையில்
தெரிந்து கொண்டேன் நீயும் என்னை காதலிக்கிறாய் என்பதை
ஆனால் உன் நாவினாலும் சொல்லிவிடு
காதலியே...