12 January 2010

மனைவியானேன்


தாய் தந்த அழகு
தந்தை தந்த அறிவு
சுமந்து சென்றேன் மனைவியாய்
புக்ககத்துக்கு பல பொருட்களோடு
ஒரு பொருளாய்…
கண்ணாடிகளில் என் விம்பம் தேய்ந்து
திடீரென அதீத அழகு கொண்டேன்
அவனுக்கு பிடித்த பதார்த்தம் பரிமாற…
அடுப்படியில் ஒரு படிகமாயே ஆனேன்…
கைக்குட்டையிலிருந்து கழுத்து பட்டி வரை தந்து
கையசைத்து அலுவலக நாட்களில் விடை கொடுத்தேன்
மாலை வேளை சாலை பார்த்து
காத்திருந்தேன் ஈருருளியின் ஓரொலிக்காய்…
வெள்ளி கிழமை விரதம் இருந்தேன்
வரலட்சுமிக்கு காப்பு கட்டினேன்
மரபு வேலி சிறை கொண்ட பெண்ணானதால்
ஒரு படியிறங்கி தோற்றும் போனேன்
கை கோர்த்தவனால் அல்ல
கை கோர்த்து கொண்டதால்..
ஒரு வகுப்பு தவறாமல் நான்
வாங்கிய பட்டம் பெட்டகத்துக்குள்
கணவனின் பட்டம் நான்கு சட்டத்துக்குள்
சுவரில்….
தலைவலி காய்ச்சல் கொண்டாலும்
சமையல் முதல் சகலமும் நான் தான்
கொண்டவன் தலைவலி கொண்டால்
அமிர்தாஞ்சனம் தேய்த்து ஆவி பறக்கும்
கோப்பியும் இலகு ஆகாரமும்….
காலை பத்திரிகை முதல் எதிலும் முன்னுரிமை
அறியாமலே ஆண் கொள்ள
தொடர் நாடகத்தில் யாரோ ஒரு அபிக்காக
போராட தொடங்கினேன் எனக்குள்
அவளும் பெண்தானே…
சமத்துவம் வரவேற்பறை தொலைகாட்சி பெட்டியில்
உயிர் கொண்டு
என் தனியறை கதவருகில் செத்து போனது..