26 June 2010

விழிகள்


இளங்கதிர் கோலங்கள் இழந்த கருங்காலை…
விண் நீந்தும் சில வான்மீன்கள்….
இருளும் ஒளியும் இணைகின்ற
இன் முத்த தருணங்களில்
மொட்டகலும் மென் மலர்கள்…
உளியிடம் தோற்ற கல்
சுமந்த சிலை கவிதைகள்..
இயற்கையின் ஈரமான மௌனத்தால்
இசையிழந்த ஏகாந்த இடைவெளியதனில்
கவியின் வார்த்தைகளிற்கான காத்திருப்பு போல்
கண்ணிழந்த அவளின் கனவுகள்
காட்சிகளுக்கு காத்திருப்பு….
கனவின் கயமைகளின் பதில்கள்
இருள் மட்டுமே நிறைந்த இரவுகள்…
விழிகள் ஒளியிழந்தால் கனவுகளுக்குள்ளுமா கதவடைப்பு???
காதோடு சேதி சொல்லி
கையோடு சேராத தென்றல் மட்டும்
துடைத்து செல்லும்
அன்றாடம் அவள் சிந்தும் பல திவலைகளை
விழி வருடி…..
அந்த வருடல் ஒன்றே அவள்
விழி உணரும் உலகு…

புழுதி படிந்த சித்திரங்கள்
வரையப்பட்டும் அறியப்படாதன….
ஒளியிழந்த கண்கள்
உடலிருந்தும் உயிரில்லாதன…
மண் தின்னும் கண்களை கொண்டு
மறு உயிரின் கனவுகளுக்கு
உயிர் கொடுங்கள்
இறப்பிலும் ஒளி காண்பீர்…



++++++++++++++++