03 January 2011

கடைசி கனவு


வாழ்வுக்கும் சாவுக்கும்
இடையில் இருந்த
கடைசி நிமிட துளிகளில்
செத்துகிடந்த ஆயிரம் கனவுகள்
ஆவிகளாய் ஆதங்கங்களாய் மருட்டின
செத்து கொண்டிருந்த கடைசி கனவு ஒன்று
உயிர் வலிக்க என்னை
உற்று பார்த்தது
பெற்று போட்டு விட்டு பேண மறுத்த தாயை பார்ப்பது போல்…

ஏகாந்தத்துக்குள் ஆயிரம் கேள்விகள் அது கேட்க
சந்தர்ப்பங்களை சாடினேன்
சூழ்நிலைகளென சூழுரைத்தேன்
கூசாமல் பொய்யுரைத்தேன்
மானுடத்தையும் மல்லுக்கிழுத்தேன்

ஏளனச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு
மறைந்து போனது என் கடைசி கனவும்!!
கோழையாய் நானும் செத்து போவேனோ??


+++++++++++++++++++++++

கலைந்த கனவுகள்


சிற்பமாகையில் சிதைக்கும் சுத்தியல்களாய்
சித்திரமாகையில் வெட்டியெறியும் கத்திரிகளாய்
பறவையாகையில் பாய்ந்திழுக்கும் ஓநாய்களாய்
மலராகையில் கடித்து குதறும் மந்தைகளாய்
சில வக்கிர மானுடங்கள்…

போராடினோம்… மன்றாடினோம்…
வக்கிரங்கள் வஞ்சித்தன
உக்கிரங்கள் உயிர்த்தெழுந்தன
கெக்கலித்தன கிலியூட்டின

போராட்டம் இழந்து
மண்ணில் சரிந்து
சாம்பலில் கலந்தோம்..
வக்கிரங்கள் கும்மாளமிட்டன
குதித்தாடின!!

செதுக்கிய உளியும்
தீட்டிய தூரிகையும்
பறக்க வைத்த சிறகுகளும்
மொட்டவிழ்த்த தென்றலும்
அழுது கொண்டிருந்தன
கலைந்த கனவுகளுக்காய்!!

உலகம் உறங்கையில் உறங்காத வஞ்சம்
நம் கல்லறைத் தோட்டங்களுக்கு காவலாய்!