12 January 2010

மனைவியானேன்


தாய் தந்த அழகு
தந்தை தந்த அறிவு
சுமந்து சென்றேன் மனைவியாய்
புக்ககத்துக்கு பல பொருட்களோடு
ஒரு பொருளாய்…
கண்ணாடிகளில் என் விம்பம் தேய்ந்து
திடீரென அதீத அழகு கொண்டேன்
அவனுக்கு பிடித்த பதார்த்தம் பரிமாற…
அடுப்படியில் ஒரு படிகமாயே ஆனேன்…
கைக்குட்டையிலிருந்து கழுத்து பட்டி வரை தந்து
கையசைத்து அலுவலக நாட்களில் விடை கொடுத்தேன்
மாலை வேளை சாலை பார்த்து
காத்திருந்தேன் ஈருருளியின் ஓரொலிக்காய்…
வெள்ளி கிழமை விரதம் இருந்தேன்
வரலட்சுமிக்கு காப்பு கட்டினேன்
மரபு வேலி சிறை கொண்ட பெண்ணானதால்
ஒரு படியிறங்கி தோற்றும் போனேன்
கை கோர்த்தவனால் அல்ல
கை கோர்த்து கொண்டதால்..
ஒரு வகுப்பு தவறாமல் நான்
வாங்கிய பட்டம் பெட்டகத்துக்குள்
கணவனின் பட்டம் நான்கு சட்டத்துக்குள்
சுவரில்….
தலைவலி காய்ச்சல் கொண்டாலும்
சமையல் முதல் சகலமும் நான் தான்
கொண்டவன் தலைவலி கொண்டால்
அமிர்தாஞ்சனம் தேய்த்து ஆவி பறக்கும்
கோப்பியும் இலகு ஆகாரமும்….
காலை பத்திரிகை முதல் எதிலும் முன்னுரிமை
அறியாமலே ஆண் கொள்ள
தொடர் நாடகத்தில் யாரோ ஒரு அபிக்காக
போராட தொடங்கினேன் எனக்குள்
அவளும் பெண்தானே…
சமத்துவம் வரவேற்பறை தொலைகாட்சி பெட்டியில்
உயிர் கொண்டு
என் தனியறை கதவருகில் செத்து போனது..

10 comments:

  1. //சமத்துவம் வரவேற்பறை தொலைகாட்சி பெட்டியில்
    உயிர் கொண்டு என் தனியறை கதவருகில் செத்து போனது..//

    உண்மை.. சுறுக்கமா.. ஆனா, சுறுக்குன்னு சொல்லியிருக்கீங்க!

    ReplyDelete
  2. நன்றி கலையரசன்…:)

    ReplyDelete
  3. வலிக்கின்ற உண்மையை, வலியோடு சொன்னது கவிதை. தொடர் முடிந்ததும் அபியின் சோகம் முடிந்து விடும். மனைவியானவள் சோகம் முடியுமா

    ReplyDelete
  4. அழகான கவிதை!

    எந்த ஆண்னுக்கு உறைக்போகிறது.

    கவிதையின் உண்மை வலிப்பதால் பலமுறை படித்தேன்.

    ReplyDelete
  5. ///சமத்துவம் வரவேற்பறை தொலைகாட்சி பெட்டியில்
    உயிர் கொண்டு என் தனியறை கதவருகில் செத்து போனது///


    அருமையான வரிகள்...உழவர் திருநாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. இதுபோலலும் மனைவியிருக்கிறாரா? கொடுத்துவைத்த கணவன்...

    மனைவியின் பொய் வரதட்சணை வழக்கில் அனைவரும் சிறைசென்று வந்து கோர்ட்டு கேசுன்று நாய்பொல் அலையும்...
    பெண்உருவில் உள்ள பிசாசிடம் மாட்டிக்கொண்ட
    நொந்து நூடில்ஸ் ஆனா கணவன் (??)

    கவிதை அருமை மற்றும் எங்களைப்போல் பாதிக்கப்பட்ட கூட்டதினை பற்றியும் ஒரு கவிதை எழுதினால் மகிழ்சி அடைவோம்

    ReplyDelete
  7. எல்லா கணவான்களும் அப்படியில்லையே...!

    ReplyDelete
  8. அழகான கவிதை!

    ReplyDelete
  9. wow
    //
    சமத்துவம் வரவேற்பறை தொலைகாட்சி பெட்டியில்
    உயிர் கொண்டு
    என் தனியறை கதவருகில் செத்து போனது..
    //
    great

    ReplyDelete