29 June 2010

அவளுக்கு மட்டும் தெரிந்த வலி


”இருபத்தி நாலுதானேயாகுது”
”இரண்டாம் தாரம் இப்ப எல்லாரும் செய்யிறது தானே??”
”எங்களுக்கு பிறகு உனக்கு யார் துணை??”
கேள்விகளுடன் ஒரு அப்பா…
மௌனமாக ஒரு மகள்…
மௌனமே மறுப்பாகவும் கூடுமோ??

ஊமையிடமும் வார்த்தைகள் உண்டு
வார்த்தை உறைந்து ஊமையானவர்களும் உண்டு..
இரண்டாவது ஜாதி அவள்…
அவள் நீண்ட மௌனங்கள்
வார்த்தை கொண்டால்
போதிமரங்கள் மட்டும் போதும்
புத்தனை கொழுத்து என்பாளோ???.
மழை பொழிந்த பின்னான களி நிலமாய்
இருந்த அவள் இதயம்
ஒரு கல்லாகி இறுகியிருக்கிறதோ???
இது இல்லாத நெருக்கங்களை
உண்டாக்க விரும்பாத
திண்ணக்கமா??
இல்லை ஏதோ ஒரு நம்பிக்கைக்குள்
உயிர் கூடு காத்து அவள் செய்யும் தவமா???

அனைவரும் ஒப்பாரி வைக்கையில்
அழடி எண்டு அம்மா அறைந்தும்
விழியில் மட்டும் உயிர் கொள்ள
மறுத்ததாம் அவள் கண்ணீர்…
ஆண்டு நான்கு கடந்தும் இன்னும்
அழவில்லையோ??

வலக்கையில் வலை கொண்டு
இடக்கையால் அவள் கன்னம் வருடி
கருக்கலில் வருவதாக சொல்லி
கடல் சென்றவனின்
ஏழை மனைவி அவள்…
காத்திருக்கிறாள் இன்னும்…
கனவு போல் அந்த வலக் கன்னத்து
கடைசி வருடல் மட்டும் இன்றும் ஈரமாக…

மணிக்கொரு தடவை
மின்னி மின்னி காதல் சொல்லும்
கைத்தொலைபேசி இல்லை…
நுனி நாக்கு ஆங்கில காதல் அறிவிப்புகள் இல்லை…
நள்ளிரவு நளினங்கள் இல்லை….
வாழ்கிறதே இன்றும் காதல்…
கடற்கரை குடிசையில்
உப்பு காற்றில்…
கருவாட்டு வாசத்தில்…

தவளைகளின் கூச்சல்
தண்டடியில் சேறு
இலை மறைத்து பாசி
ஆனாலும் இடையில் அழகான மலர்
தாமரை…
அது போல ஒரு காதல்…
ஆனால்
மந்திரத்துக்குள் கட்டுண்டது போல்
கொண்ட மௌனம்
அவளுக்கு மட்டுமே தெரிந்த வலி…


++++++++++++

5 comments:

  1. உண்மை காதல் வாழ்க

    ReplyDelete
  2. எங்கும் நிறைந்திருக்கும் காதல்

    ReplyDelete
  3. அந்த காதலைப் போலவே கவிதையும் அழகு. .
    //ஊமையிடமும் வார்த்தைகள் உண்டு
    வார்த்தை உறைந்து ஊமையானவர்களும் உண்டு..//
    வார்த்தைகள் இல்லை

    ReplyDelete
  4. அருமை....

    இதுவே என்னுடைய பார்வையில் ...

    http://forum.padukai.com/post7316.html#p7316

    இதையும் பாருங்களேன்.

    இவன்
    படுகை.காம்

    ReplyDelete