
கல்யாண சந்தையில்
பெயர் மட்டும் தெரிந்தவனின் இடப்புறம் அமர்ந்து
தந்தையின் கடைசி நிலம் மட்டும் அடகு வைத்து
பொற் கொல்லன் செய்த தாலியை
நாணப் போர்வைக்குள் ஏற்றுக் கொண்டு
உணர்வுகளால் எழுத வேண்டிய காதலை
உருவத்தில் மட்டும் ஆண்மகனாக நின்றவனின்
பேடித்தனத்துக்கு காதலியாகி
நான்கு நாட்கள் வாழ்ந்து ஐந்தாம் நாள் விதவையாகி
வாழ்வின் சகல அத்தியாயங்களையும்
வாழ்ந்து விட்டவளாகி
ராசியில்லாதவளாகி
வெள்ளை உடை கொள்ளாத அமங்கலியாகி
எல்லாம் ஆகி முடிந்து விட்டன
ஆனால்
நியாயமான ஆசைகள் கூட
அடக்கப்பட வேண்டிய கட்டாய கதவுக்குள்
அதீதமான ஆசைகள் ஆர்ப்பரிக்கும்
அநியாய கனாக்கள் காண்கிறேன்
அந்தியில் வரும் கற்பனை காதலனுக்காக
செந்திலகம் சூடி நிற்கிறேன்
துள்ளி விளையாடுவாள் சின்ன மகள்
என்ற குருட்டு நம்பிக்கையில்
கரடி பொம்மை வாங்கி சேர்க்கிறேன்
பனியிருளில் மழையிரவில்
சாசுவதமான தனிமையில்
அசாத்தியமான அமைதியில்
உரத்து சிரிக்கின்றேன்
இலையுதிர்கால தெருக்களின் சருகுகள் போல
வரட்சியாக
வாழ்விழந்தவள் நான் என்ற வினோதம் கண்டு.
//துள்ளி விளையாடுவாள் சின்ன மகள்
ReplyDeleteஎன்ற குருட்டு நம்பிக்கையில்
கரடி பொம்மை வாங்கி சேர்க்கிறேன்//
நல்ல வரிகள்..
//உணர்வுகளால் எழுத வேண்டிய காதலை
ReplyDeleteஉருவத்தில் மட்டும் ஆண்மகனாக நின்றவனின்
பேடித்தனத்துக்கு காதலியாகி//
அருமையான வரிகள். வாழ்த்துக்கள்
கவிதையில் ”தற்கொலை” என்ற வார்த்தை எழுந்தால் நன்றாக அமைந்து இருக்கும்.
ReplyDeleteHii Ur poem are really wonderful ..... Keep writing .
ReplyDeleteதொடர்ந்து எழு துங்களேன் மிகவும் சோகமாகவலி சுமந்தவையாக இருகின்றன.உங்களுக்கும் ஒருவடி காலாய் அமையும்.
ReplyDelete